தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: கட்சியினருடன் விஜயகாந்த் தீவிர ஆலோசனை
By மது | Published On : 27th October 2012 02:26 PM | Last Updated : 27th October 2012 02:45 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது கட்சியினருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று இரண்டு தேமுதிக எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து, பாராட்டு தெரிவித்தனர். இன்றும் இரண்டு தேமுதிக எம்.எல்.ஏக்கள் முதல்வரைச் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து கட்சி எம்.எல்.ஏக்கள் தேமுதிக.வில் இருந்து விலகுவார்கள் என்று கூறப்படும் தகவல்கள் குறித்து, அவர் கட்சியினருடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
முன்னதாக, இன்று காலை மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை கட்சியினர் யாரும் வரவேற்க வரவேண்டாம் என்று தடை விதித்துவிட்டார் விஜயகாந்த்.
விமான நிலையத்தில் அவரிடம் செய்தியாளர்கள் கேள்விகளைக் கேட்க குவிந்திருந்தனர். ஆனால் அவர் யாரையும் சந்திக்க விரும்பவில்லை. இந்நிலையில் அவரது அலுவலகச் செயலர் பார்த்தசாரதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், அதிமுக எம்.எல்.ஏக்களும் இப்படித்தான் சென்று சந்தித்தார்கள். அதனால் ஒன்றும் ஆகிவிடாது. இது வழக்கமான ஒன்றுதான் என்று கூறினார்.
இருப்பினும், அப்போதும் விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்திக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.