

சத்துணவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விருதுநகரில் அரசு ஊழியர் சங்க கட்டட வளாகத்தில் நடந்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 12-வது மாவட்ட மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் பி.முனியசாமி தலைமை வகித்தார். வரவேற்புக்குழு தலைவர் லெட்சுமி நாராயணன் வரவேற்றார். மாநில செயலாளர் வைத்தியநாதன் மாவட்ட மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில், சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வேலை குறித்த அறிக்கையை மாவட்ட செயலாளர் எம்.தியாகராஜன் வாசித்தார். மாவட்ட பொருளாளர் பி.சுப்புக்காளை நிதி நிலை அறிக்கையை வழங்கினார்.மேலும், தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் கண்ணன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கதிரேசன், ஆதிதிராவிடர் நலத்துறை பணியாளர்கள் சங்கத்தின் மாநில அமைப்பாளர் எஸ்.சுந்தராஜன், வருவாய் கிராம உதவியாளர் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் எ.சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்த மாவட்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு: 30 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்களை நிரந்தரமாக்கி முறையான கால முறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாகவும், குடும்ப ஓய்வூதியமாகவும் வழங்கவும், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கவும் மற்றும் பணிச்சுமையை குறைக்கும் வகையில் காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்பவும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பிரதிநிதிகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.