மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வேட்டையாடுதல், கஞ்சா வளர்ப்பில் ஈடுபடும் சமூக விரோதிகளை கண்காணிக்க குழு அமைப்பு

விருதுநகர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீ வைப்பவர்கள், வேட்டையாடுதல் மற்றும் உள்பகுதியில் கஞ்சா வளர்ப்பில் ஈடுபட்டு வரும் சமூக விரோதிகளை கட்டுப்படுத்தும் வகையில் வனத்துறை குழு அமைத்து
Updated on
1 min read

விருதுநகர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீ வைப்பவர்கள், வேட்டையாடுதல் மற்றும் உள்பகுதியில் கஞ்சா வளர்ப்பில் ஈடுபட்டு வரும் சமூக விரோதிகளை கட்டுப்படுத்தும் வகையில் வனத்துறை குழு அமைத்து தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக மண்டல வனப்பாதுகாவலர் ஆஸிஸ் ஸ்ரீவத்சவா தகவல் தெரிவித்தார்.

விருதுநகர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மான், மிளா, காட்டுப்பன்றி, புலி, சாம்பல் நிற அணில்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மிருகங்கள் உள்ளன. இதேபோல், எனவே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அடிவாரப்பகுதியில்  சாப்டூர் சதுரகிரி மலை, வத்திராயிருப்பு அருகே தாணிப்பாறை, பிளவக்கல் அணை, பெரியார் அணை, அழகர்கோயில் அணை, அய்யனார் கோயில் அணை மற்றும் சேத்தூர் பகுதி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர்   விளைநிலங்கள் உள்ளன.

இந்த விளைநிலங்களுக்குள் மான், மிளா மற்றும் காட்டுப்பன்றி மற்றும் காட்டெருமைகள் புகுந்து சாகுபடி பயிர்களை அளித்து நாசம் செய்து விடுகிறது. இதுபோன்று வரும் விலங்குகளை சமூக விரோதிகள் இறைச்சிக்காக வேட்டையாடும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிப்பு, கூமாபட்டி ஆகிய பகுதிகளில் வேட்டையாடிய கும்பல்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் வனத்துறையினர் மூலம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதோடு, பசுமையான பகுதிகளில் கஞ்சா வளர்த்து வரும் சமூக விரோதிகளும், மரங்களை வெட்டி கடத்துகின்றவர்களும் வனத்துறையினரின் கவனத்தை திசை திருப்பும் வகையில் தீவைக்கும் சம்பவங்களிலும் ஈடுபட்டு வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களால் மலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் தீ பரவி விலைமதிப்பில்லா மரங்களும் கருகி வருவதோடு, சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பையும் ஏற்படுத்தி வருகின்றனர்.  

எனவே இவைகளை தடுக்கும் வகையில் எந்தெந்த பகுதி விளைநிலங்களில் விலங்குகள் அதிமாக நடமாட்டம் உள்ளது என் கண்டறிவதற்கும், அதை சமூக விரோதிகள் வேட்டையாடுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. அதேபோல், மலைப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா வளர்க்கப்படுகிறதா என்றும், தீ வைக்கும் கும்பலையும் தொடர்ந்து கண்காணிப்பதற்கு ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதிக்கும் வனத்துறை அலுவலர்கள் குழு அமைக்கப்பட இருக்கிறது. இவர்கள் ஒவ்வொரு குழுவும் மேற்படி செயல்களில் ஈடுபடுகிறவர்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள் என மண்டல வனத்துறை பாதுகாவலர் ஆஸிஸ் ஸ்ரீவத்ஸவா தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com