ஊசி போடுதல், ரத்த மாதிரிகளை எடுத்துல் உட்பட முழுமையாக பயிற்சி முடித்தால்தான் பயிற்சி மருத்துவர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ் அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் கே. செந்தில் கூறியுள்ளார்.
பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் குறித்து மதுரையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் கே. செந்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த 15 நாட்களாக அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனால், நோயாளிகளுக்கு ஊசி போடவும், மருந்து கொடுக்கவும் மறுத்து வருகின்றனர். இது சரியல்ல. அவர்கள் போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். அவர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும். இந்திய மருத்துவக் குழுவில் வழிகாட்டுதல்படி, எந்தெந்த முறைகளில் அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமோ, அந்த முறைப்படிதான் மருத்துவ பேராசிரியர்கள் பயிற்சி மருத்துவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் நோயாளிகளுக்கு ஊசி செலுத்துவதும், ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்துவதும் அடங்குகிறது. இப்பயிற்சிகள் பயிற்சி மருத்துவர்களின் பயிற்சி காலத்தில் முக்கியமானதாகும். ஆகவே, இதுபோன்ற பணிகளை செய்ய மாட்டோம் என்று கூறுவது பயிற்சி மருத்துவர்கள் பயிற்சியை முழுமையாக்காது. ஆகவே, பயிற்சி காலத்தில் பயிற்சியை முழுமையாக செயல்படுத்தாத பயிற்சி மருத்துவர்களுக்கு பயிற்சி முடித்த நிலையில், பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்க இயலாது. எனவே, பயிற்சி காலத்தை நீட்டிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே, மத்திய மருத்துவக் குழுவின் வரன்முறைகளை பயிற்சியாக அளித்து வரும் நிலையில், அதை பயிற்சி மருத்துவர்கள் மேற்கொள்வது அவசியம்.
ஊசி மருந்து செலுத்துவது செவிலியர்களின் பணி என்று கூறுவதும் சரியலல். செவிலியர் முதல் பேராசிரியர் வரை பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவருமே கூட்டாகச் சேர்ந்துதான் சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் மூத்த பேராசிரியர்கள் கூட நோயாளிகளின் நலன் கருதி ஊசி போடுவதும், ரத்த மாதிரி எடுப்பதும் அவசியமாகும்.
இந்த நிலையில், பயிற்சி மருத்துவர்கள் தங்களுக்கான பணி அல்ல என்று பயிற்சியை ஒதுக்குவது சரியல்ல. பயிற்சி மருத்துவர்களை சில செவிலியர்களும், மருத்துவ பணியாளர்களும் மரியாதைக் குறைவாக நடத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவ்வாறு செய்தவர்கள் மீது மருத்துவ நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரத்த மாதிரிகளை ஆய்வகத்துக்கு எடுத்துச் செல்வதும், முடிவுகளை வாங்கி வருவதுமான பணிகளை செய்வது மருத்துவமனை பணியாளர்களின் கடமை. ஆகவே அதனை பயிற்சி மருத்துவர்கள் மூலம் செயல்படுத்துவதும் சரியல்ல.
ஆகவே பயிற்சி மருத்துவர்களுக்கு போதிய வசதிகளை சம்பந்தப்பட்ட மருத்துவ நிர்வாகம் செய்து தர வேண்டும். அத்துடன் எதிர்வரும் காலங்களில் பயிற்சி மருத்துவர்கள் அனைவருமே அந்தந்த மருத்துவமனை விடுதியில் தங்கி 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் மத்திய மருத்துவக் கவுன்சிலின் வழிகாட்டுதல் படி பணியாற்ற அரசு நடவடிக்கை எடுப்பதும் அவசியம். அப்படி செய்தாலே பயிற்சி மருத்துவர்கள் சிறந்த மருத்துவ நிபுணர்களாக வழி பிறக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.