கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்த பெண் சாவு: திருச்சி மருத்துவமனை மீது புகார்

கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நாமக்கல்லைச் சேர்ந்த பெண் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். தொடர்ந்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்த திருச்சி தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது
Updated on
1 min read

கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நாமக்கல்லைச் சேர்ந்த பெண் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். தொடர்ந்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்த திருச்சி தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது குற்றஞ்சாட்டி அப்பெண்ணின் உறவினர்கள் நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

நாமக்கல் ஆண்டவர் நகரை சேர்ந்த பெயிண்டர் செல்வராஜின் மனைவி கலைவாணி(26). கடந்த சில மாதங்களுக்கு முன் காலில் வீக்கம் ஏற்பட்டதை அடுத்து திருச்சி மாவட்டம் நரசிங்கபுரத்திலுள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். தொடர்ந்து திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு கலைவாணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மாற்று சிறுநீரகம் பொறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து கலைவாணியின் தாய் ராஜேஸ்வரியின் சிறுநீரகத்தை பொறுத்த முடிவு செய்யப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. அரசு காப்பீட்டு திட்டத்தின்கீழ் தென்னூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கலைவாணிக்கு கடந்த ஜூலை 22-ம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த மறுநாள் ராஜேஸ்வரியின் சிறுநீரகம் பொருந்தவில்லை என்பதால் சிறுநீரகத்தை எடுத்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதுடன், விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம், 6 மாதங்களுக்குள் வேறு நல்ல கிட்னி கிடைத்தபிறகு அறுவை சிகிச்சை செய்து வைத்துவிடுவதாகவும் தெரிவித்தனராம். அதிர்ச்சியடைந்த கலைவாணி மற்றும் அவரது உறவினர்கள், இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி புகார் அளித்தனர். எனினும், இப்புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நாமக்கல்லிலுள்ள தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் முறையில் சிகிச்சை பெற்றுவந்த கலைவாணி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, கலைவாணியின் உடலை பிரேத பரிசோதனை செய்து மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு மாற்று கிட்னியை பொறுத்திவிட்டு எடுத்தது தொடர்பான உண்மையை தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்து நாமக்கல் காவல்நிலையத்தில் இன்று காலை புகார் அளித்தனர்.

அப்போது கலைவாணியின் கணவர் செல்வராஜ் கூறுகையில், அறுவை சிகிச்சையின்போது கலைவாணிக்கு மாற்று கிட்னி வைக்காமலேயே கிட்னியை வைத்துவிட்டு எடுத்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கக்கூடும் என்று சந்தேகம் நிலவுகிறது. எனவே, கலைவாணியின் உடலை பிரேத பரிசோதனை செய்து அதை உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன், கலைவாணிக்கு பொறுத்த ராஜேஸ்வரியிடம் இருந்து எடுக்கப்பட்ட கிட்னியை மருத்துமனை நிர்வாகம் என்ன செய்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

போலீஸார் வழக்குப்பதிவு செய்ததை அடுத்து கலைவாணியின் உடலை அரசு மருத்துவர்கள் முரளிதரன், அன்புமணி ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முழுவதையும் போலீஸார் வீடியோவில் பதிவு செய்தனர். ஓரிரு நாட்களுக்கு பிறகு பிரேத பரிசோதனை அறிக்கை அளிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com