செங்கோட்டையிலிருந்து சென்னைக்குச் செல்லும் வகையில் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் நீட்டிக்கப்படும் என்று தென்னக ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்தார்.
செங்கோட்டை ரயில் நிலையத்துக்கு இன்று காலை தனி ரயில் மூலம் தென்னக ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா வருகை தந்தார். அவருக்கு தென்னக ரயில்வே பணியாளர்கள், எஸ்.ஆர்.எம்.யூ உள்ளிட்ட தொழிற் சங்கத்தினர், பயணிகள் நல சங்கம், மனித உரிமை அமைப்புகள், லயன்ஸ் கிளப் உள்ளிட்ட அமைப்புக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப் பட்டது.
பின்னர் அவர் ரயில் ஓட்டுனர்கள், அதிகாரிகள் தங்கும் விடுதியைத் திறந்து வைத்தார். புதிய நடைமேடை, கூடுதல் இருப்புப் பாதைகள் அமைக்கும் பணிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர்...
மதுரை கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் அடுத்த 5 ஆண்டுகள் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்தும், தற்போது நடைபெறும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்ய வந்துள்ளேன். தென்னக ரயில்வேயின் அனைத்துப் பிரிவு அதிகாரிகள் இந்த ஆய்வில் இடம்பெற்றுள்ளனர்.
செங்கோட்டை-புனலூர் அகல ரயில்பாதை அமைக்கும் பணி ரூ.300 கோடி மதிப்பீட்டில் தொடங்கப் பட்டது. ஆனால் இப்பணி குறித்த காலத்துக்குள் முடிக்க முடியாமல் உள்ளது. ரூ.20 கோடி நிதியே ஒதுக்கப்பட்டது; மலைகள், பாறைகள் நிறைந்து இருப்பதும் அதனால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதும் ஒரு காரணம். அரசுக்கு இதுகுறித்து தெரிவித்துள்ளோம். போதிய நிதி ஒதுக்கிடு வந்த உடன் பணிகள் தொடங்கப்படும். ஆனால் எப்போது பணிகள் நிறைவு பெறும் என்பது தெரியாது.
பொதிகை விரைவு ரயில் உள்பட தென்னக ரயில்வேயில் அடிக்கடி இஞ்சின் பழுது ஏற்படுவதாக கூறுகிறார்கள். ஆனால், 94% குறித்த நேரத்துக்கு தென்னக ரயில்கள் இயங்கிவருகின்றன.
தற்போது மானாமதுரையிலிருந்து சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.