ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஜாமீனில் வந்தவரை கொலை செய்த வழக்கு: ஸ்ரீவிலி. நீதிமன்றத்தில் 7 பேர் சரண்

மதுரையில் கடந்த ஆண்டு நிகழ்ந்த பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் ஜாமீனில் வெளிவந்த முத்துவிஜயன் ஒரு கும்பலால் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த 7 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர்.

News image
Updated On :6 டிசம்பர் 2013, 7:54 am

கோ.ஜெயக்குமார்

மதுரையில் கடந்த ஆண்டு நிகழ்ந்த பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் ஜாமீனில் வெளிவந்த முத்துவிஜயன் ஒரு கும்பலால் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த 7 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர்.

இவர்களை 8 நாட்கள் நிதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கவிதா உத்தரவிட்டார். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் 2012 அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி நடைபெற்றது. இதில் மதுரை அருகேயுள்ள புளியங்குளத்தைச் சேர்ந்த 20 பேர் காரில் சென்றுவிட்டு இரவு ஊர் திரும்பினர். விரகனூர் அருகே நான்கு வழிச் சாலையில் அவர்கள் வந்தபோது மர்மக் கும்பல் காரின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதில் அனைவரும் காயமடைந்தனர்.

அனைவரும் சிகிச்சை பெற்ற நிலையில், சுந்தரபாண்டி, வெற்றி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். அவனியாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பொட்டப்பாளையம் அருகே உள்ள பாட்டத்தைச் சேர்ந்த முத்துவிஜயன் மற்றும் அனுப்பானடியைச் சேர்ந்த ராமர், மணிகண்டன், கார்த்திக், சந்திரசேகர், சோணையா, நாகராஜ், முத்துக்கருப்பன், மோகன், விக்னேஷ், சந்தோஷ் ஆகியோரை கைது செய்தனர். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதான இவர்கள் உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் விடுவிக்கப்பட்டனர். பின்னர், காவல் துறையின் மேல்முறையீட்டால் மீண்டும் கைதாகி அண்மையில் ஜாமீனில் வெளி வந்தனர்.

இவர்களில் சந்தோஷ் விசாரணைக்கு ஆஜராகாததால், மாவட்ட நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. அவனியாபுரம் காவல் நிலையத்தில் ராமர் கையெழுத்திட்டு வருகிறார்.

முத்துவிஜயன் உள்ளிட்ட 9 பேர் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள 6-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காலை, மாலையில் கையெழுத்திடுகின்றனர்.

வியாழக்கிழமை காலையில் முத்துவிஜயன், சோணை, விக்னேஷ் உள்ளிட்ட 8 பேரும் அனுப்பானடியில் இருந்து காரில் நீதிமன்றத்துக்கு கையெழுத்திடச் சென்றனர். அவர்களுக்குப் பாதுகாப்பாக 2 மோட்டார் சைக்கிளில் அவர்களது உறவினர்கள் அர்ச்சுனன், முனீஸ்குமார் உள்ளிட்டோரும் சென்றனர். கையெழுத்திட்டு முடிந்ததும் காரில் ஏறி அனுப்பானடி சென்றனர். தெப்பக்குளத்திலிருந்து அனுப்பானடிக்குச் செல்லும் வழியில் தனியார் பெண்கள் பள்ளி அருகே அவர்கள் வந்தபோது, திடீரென அங்கிருந்த மர்மக் கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் மோட்டார் சைக்கிள்கள் தீப்பற்றி எரிந்து, முற்றிலும் சேதமடைந்தன. மேலும், கார் கண்ணாடிகளை அரிவாளால் வெட்டினர். இதனால் காரில் இருந்தவர்கள் தப்பியோடினர். ஆனால், ஓடியவர்களை வழிமறித்து கும்பல் வெட்டியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த முத்துவிஜயன்(23) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், சோணையா (23), அர்ச்சுனன் (18), முனீஸ்குமார் (24), விக்னேஷ் (24) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அர்ச்சுனன், முனீஸ்குமார் ஆகியோர் முத்துவிஜயனுக்கு பாதுகாவலாக வந்தவர்கள்.

இது குறித்து தெப்பக்குளம் போலீஸார் பலர் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவு எதிரிகளைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மதுரை, மேல அனுப்பனாடி, ஹவுசிங் போர்டைச் சேர்ந்த முத்துராஜா மகன் முத்துக்குமார் (24), இதே இடத்தைச் சேர்ந்த நாகவடிவேல் மகன் குமரன் (24), மேல அனுப்பானடி, வாசுகி தெருவைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் கார்த்திக் (24), இதே இடத்தைச் சேர்ந்த வேல்முருகன் மகன் விஜய் (23), மதுரை ஆசிரியர் காலனி, மருதுபாண்டியர் நகர் கதிரேசன் மகன் ஆசைத்தம்பி (25), மேல அனுப்பானடி, ஹவுசிங் போர்டைச் சேர்ந்த பாண்டி மகன் சரவணக்குமார் (23), இதே இடத்தைச் சேர்ந்த வலம்புரி மகன் அருண்குமார் (23) ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் நீதிபதி கவிதா முன்னிலையில் சரவணடைந்தனர். இவர்களை 8 நாட்கள் (13.12.2013 வரை) நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி கவிதா உத்தரவிட்டார். இதனையடுத்து இவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் பகல் 12.45 மணியளவில் மதுரை மத்திய சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர்.

இதனையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் அரசு மருத்துவமனையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.