மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயற்சி செய்த மூதாட்டியால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகமே பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூனம்பட்டியைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மனைவி மாரியம்மாள்(70). ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக நேரில் வந்தார். அப்போது, அங்கு காவல் பணியிலிருந்த போலீஸார் சிறிது நேரம் கழித்துச் செல்லும் படி கூறியுள்ளனர்.
இதையடுத்து ஆட்சியரின் காருக்கு முன்னாள் சென்ற மூதாட்டி தான் பையில் மறைத்து வைத்து கொண்டிருந்த மண்ணெண்ணெய் கேனை தன்மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். உடனே அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்கு இருந்த சூலக்கரை போலீஸார் தடுத்து நிறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனிடம் அழைத்துச் சென்றனர். அங்கு மூதாட்டியிடம் விசாரித்ததில், இவருக்கு சொந்தமான இடத்தில் வீடு அமைக்க தி்டடமிட்டுள்ளனர். ஆனால், இக்குறிப்பிட்ட இடத்தில் வீடு கட்டவிடாமல் இவரது உறவினர் ஒருவர் குப்பைகளை கொட்டி வேலை செய்ய விடாமல் தடுத்தாராம். இது குறித்து கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் இரண்டு முறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் தீக்குளிக்க முயற்சித்தாக மாரியம்மாள் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து, மூதாட்டி கொண்டு வந்திருந்த பட்டா ஆவணங்களை சரிபார்த்து அதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி காவல் துறை தனிப்பிரிவுக்கு உத்தரவிட்டார். பின்னர் தனிப்பிரிவினர் கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, சமதானம் செய்து போலீஸார் மூதாட்டியை சொந்தக் கிராமத்திற்கு பஸ் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இந்தச் தீக்குளிப்பு முயற்சி செய்த சம்பவத்தினால் ஆட்சியர் அலுவலக வளாகமே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.