

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் கூடுதலாக மும்முனை மின்சாரம் விநியோகம் செய்யவும், அதேநேரத்தில் மின்தடை குறித்து முன்னறிவிப்புச் செய்யவும் வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி மற்றும் வேளாண்மை துறை இணை இயக்குநர் எஸ்.சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே நடந்த விவாதம் வருமாறு:
விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரராஜா: இப்பகுதியில் நெல், கரும்பு, நிலக்கடலை போன்ற பணப்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் பயிர்களை காப்பாற்றுவதற்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. அதனால், தற்போது வழங்கப்பட்டு வரும் 3 மணி நேரம் மும்முனை மின்சாரம் போதுமானதாக இல்லை. எனவே கூடுதலாக 5 மணிநேரம் வரையில் வழங்க வேண்டும். அதேபோல், மின்தடையை முறையாக முன்னறிவிப்புச் செய்து நிறுத்தம் செய்வது அவசியம் ஆகும். இல்லையென்றால் தோட்டத்தில் பல்வேறு வேலைகளை தவிர்த்து விட்டு காத்திருக்க வேண்டியது உள்ளது. மேலும், ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அளவு மின்சாரம் விநியோகம் இல்லாத நிலையில், அதற்கு மறுநாள் கூடுதலாக கிடைக்கும் படி பகிர்ந்து அளிக்கவும் வேண்டும் என்றார்.
நீர்ப்பாசன சங்கத்தின் செயலாளர் இருளப்பன்( பிளவக்கல் நீர்த்தேக்க திட்டம்):
வத்திராயிருப்பு, கான்சாபுரம், கூமாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை உள்ளிட்ட பல்வேறு தானியப்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இப்பயிர்களை காட்டுப் பன்றிகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்து பாதிக்கப்படும் சூழ்நிலையேற்பட்டுள்ளது. அதனால், இதை தடுக்கும் வகையில் வனத்துறை மூலம் பார்வையிட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கான்சாபுரம் மேற்கே மேற்கு மலைத்தொடர்ச்சி அடிவார ஓடைப்பகுதியின் இடையே விவசாயிகள் எளிதாக தோட்டங்களுக்குச் சென்று வரும் வகையில் பாலம் அமைக்க பல்வேறு முறை கோரிக்கை மனு அளித்துள்ளேன். எந்த நடவடிக்கையும் இல்லையென்றார்.
அம்மையப்பன் (தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர்): விருதுநகர் மாவட்டத்தில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வீரிய ஒட்டு ரகம் என்ற பேரில் மிளகாய், தக்காளி, பாகக்காய், வெண்டை உள்ளிட்டவைகளை விதை விற்பனை நிலையங்களில் போலியாக விற்பனை செய்து வருகின்றனர். இதை வாங்கி பயிரிட்ட விவசாயிகளுக்கு மகசூல் கிடைக்காமல் பாதித்து வருகின்றனர். எனவை இதை கட்டுப்படுத்துவதற்கு விதை ஆய்வு மையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதேபோல், அரசு விவசாய விரிவாக்க மையங்களில் குறிப்பிட்ட நேரத்தில் விதைகள் மற்றும் உரங்கள் ஆகியவை கிடைக்கவில்லை. அதனால், விதைப்பு நேரங்களில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், கால்நடைகளுக்கு கோமாரி, கானை நோ்ய்களை தடுப்பதற்கு தடுப்பூசி போட்டால் கட்டுப்படவில்லை. மூலிகை மருந்துகளுக்கு தான் கட்டுப்படுகிறது. அதனால் கால்நடை மருத்துவமனையில் மூலிகை மருத்துவத்தை செயல்படுத்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றனர்.
இதற்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் பதிலளித்து பேசுகையில், இனிமேல் தோட்டங்களில் விவசாயிகளை காக்க வைக்காமல், முன்முனை மின்சாரத்தை முன்னறிவிப்புச் செய்து தான் நிறுத்த வேண்டும். அந்தந்த பகுதிகளில் உள்ள மின்சாரத் துறை உதவியாளர்கள் மூலம் விவசாயிகளுக்கு தெரிவிக்கவும், கூடுதலாக வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். காட்டுப்பன்றிகளை வனத்துறை அலுவலர்கள் மூலம் கட்டுப்படுத்தப்படும். அதேநேரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலத்தை பார்வையிட்டு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கான்சாபுரம் பகுதியில் ஓடையின் மீது பாலம் அமைப்பதற்கு குறைந்த அளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால், கூடுதல் நிதி பெறுவதற்கு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த நிதி கிடைத்தவுடன் உடனுக்கு உடன் பாலம் அமைக்கப்படும். அரசு விரிவாக்க மையங்களில் விதை உரங்கள் போதுமான இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் எந்த நேரத்திலும் விநியோகிக்கப்படும்.
குறிப்பிட்ட பகுதிகளில் வீரிய ஒட்டு ரகம் என்கிற பல்வேறு விதைகளை விற்பனை செய்யும் நிலையங்களில் விதை ஆய்வு மைய அலுவலர் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கோமாரி, கானை நோய் உள்ளிட்டவைகளை தடுப்பதற்கு கால்நடை மருந்தகங்களில் மூலிகை மருத்துவம் செய்வதற்கு மருத்துவர்களிடம் ஆலோசித்த பின்னரே செயல்படுத்த முடியும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தி்ல் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகதாஸ், வனத்துறை கோட்ட அலுவலர் அசோக்குமார், விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.