விருதுநகர் மாவட்டத்தில் இளைஞர் காவலர் படை உடற் தகுதி தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மதுரை சரக காவல் துறை துணைத் தலைவர் ஆனந்த் சோமானி அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் இளைஞர் காவல் படையினருக்கான தேர்வு அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் எழுத்துத் தேர்வு கடந்த நவ.10-ம் தேதி நடைபெற்றது. அதில், விருதுநகர் மாவட்டத்திலிருந்து 6071 பேர் தேர்வு எழுத விண்ணப்பத்திருந்த நிலையில், 5654 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். அதில், 1714 பேர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான அடுத்த கட்ட தேர்வான சான்றிதழ் சரிபார்த்தல், உடல் தகுதி தேர்வு வருகிற 30ம் தேதி தொடங்கி, ஜன-2ம் தேதி வரையில் விருதுநகர் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இதற்கான முன்னேற்பாடு பணிகளை சரியாக செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து மதுரை சரக காவல் துறை துணைத் தலைவர் ஆனந்த்சோமானி, மாவட்ட காவல் துறை அதிகாரிகளுடன் உடல் தகுதி நடைபெற இருக்கிற விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டார். அதோடு, வெளியாள்கள் உள்ளே வர முடியாத அளவிற்கு சுற்றிலும் பாதுகாப்பு சுவர் உள்ளதா என கேட்டறிந்தார். மேலும், குறிப்பிட்ட உடற்தகுதி தேர்வுக்கு சான்றிதழ் சரிபார்ப்பவர், உயரம் எடுப்பவர் உள்ளிட்ட ஒவ்வொரு பணிகளையும், அதற்கென நியமனம் செய்யப்பட்ட பொறுப்பாளர்கள் மட்டும் செய்ய வேண்டும். அதை எக்காரணம் கொண்டும் தேர்வு நாளில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கான அனுமதி அடையாள அட்டைகளையும் வழங்க வேண்டும்.
அதேபோல், மைதானத்திற்கு உள்ளே வருகிற இளைஞர்களை அழப்பாணை, அடையாள சான்று ஆகியவைகளை ஆய்வு செய்த பின்னரே உடல் தகுதி திறன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர்களுடன் வருகின்றவர்களை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கவே கூடாது காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அதையடுத்து, உடல் தகுதி தேர்வுக்கான அரசு விதிமுறைப்படி உயரம், மார்பளவு உள்ளிட்ட அளவுகள் எடுப்பது குறித்து காவல் பணியாளர்களின் ஒத்திகை நடைபெற்றது.
அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சியமளாதேவி, வந்திதா பாண்டே, விருதுநகர் காவல் துறை கண்காணிப்பாளர் சுலைமான் உள்ளிட்ட அனைத்து டி.எஸ்.பிக்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளி்ட்டோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.