

காதலித்த இளைஞர் தன்னை திருமணம் செய்ய மறுப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தனது குழந்தையுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி, ரஹ்மத்துல்லாபுரம் மேற்குதெருவைச் சேர்ந்தவர் நாகூர்மகள் தனலட்சுமி (34). தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று காலை சென்ற தனலட்சுமி தனது குழந்தையுடன் கையில் ஒரு அட்டையை பிடித்தபடி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.தனக்கு நீதிவேண்டும் என்று கூறிய அவர் தன்னை காதலித்து ஒரு குழந்தைக்கு தாயாக்கிவிட்டு தலைமறைவாகிவிட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கும் வரைஉண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதகா அறிவித்தார்.இந்தப் போராட்டம் குறித்து தனலட்சுமி கூறியபோது:
தூத்துக்குடி ரஹ்மத்துல்லாபுரத்தைச் சேர்ந்த நான் பிஎஸ்சி கணினி அறிவியல் படித்துள்ளேன். தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் என்னை தூத்துக்குடி அரசு அலுவலர் குடியிருப்பைச் சேர்ந்த நாகராஜன் மகன் கார்த்திகேயன் (33) காதலிப்பதாக தெரிவித்தார். கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தோம். என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறியதால் இருவரும் தனிமையில் சந்தித்துக் கொண்டோம். இதனால் கடந்த 2010-ம் ஆண்டு கருவுற்றேன். இதையடுத்து நான் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தவே, 2011ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி தூத்துக்குடி பஸ் நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் வைத்து அவர் தாலி கட்டினார். மேலும், திருமணத்தை பதிவு செய்யவும் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில், கடந்த 2011 செப்டம்பரில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது.அதன்பின் அவர் என்னை பார்க்க வருவதையும், செல்போனில் பேசுவதையும் நிறுத்திக்கொண்டார்.
இதுகுறித்து அவரது தாயார் கோமதியம்மாளிடம் கேட்டபோது அவர் என்னை குடும்பத்தோடு எரித்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனுகொடுத்தேன். அவர் அந்த மனுவை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்.கடந்த 12 நாள்களாக காவல் நிலையம் சென்று அலைக்கழிக்கப்பட்டு வருகிறேன்.அங்கு எனக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. போலீஸார் ஒருதலைபட்சமாக நடந்துவருகின்றனர். எனவே, எனக்கும், என் குழந்தைக்கும் நீதி கிடைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்று கூறினார். பிற்பகல் 3.30 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்ட தனலட்சுமியிடம், சமூக நலத்துறை அலுவலர் அலுவலர் முத்துவிநாயம் பேச்சுவார்தை நடத்தினார். அவரதுமனு குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தனலட்சுமி புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில் கார்த்திகேயன் தூத்துக்குடியில் லாரி போக்குவரத்து நிறுவனம் நடத்தி வருவதும் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதும் தெரிய வந்தது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.