ஈரோடு அருகே ‘அம்மா’ திட்டம் தொடக்கம்
ஈரோடு சத்தியமங்கலம் அருகே இன்று காலை ’அம்மா’ சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் அடிப்படையில் 1325 பயனாளிகள் அளித்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் திட்டத்தைத் தொடங்கிவைத்துத் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு வாரமும் வருவாய்த் துறை அலுவலர்கள் பொதுமக்களின் வீடு தேடி வர உள்ளனர். இந்தப் புதிய திட்டத்தை ஈரோடு மாவட்டம் வின்னப்பள்ளி கிராமத்தில் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு தொடங்கிவைத்தார் அமைச்சர்.
AMMA (Assured Maximum Service to Marginal People in All Villages) என புதிய திட்டத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.
என்னென்ன சேவைகள்? அரசின் பல்வேறு சேவைகள் மற்றும் சான்றிதழ்களைப் பெறுவதற்கு பொது மக்கள் தாலுகா அலுவலகங்களுக்கு பலமுறை வந்து மனுக்களை அளித்து வருகின்றனர். தாசில்தார்கள் பலர் வெளி அலுவல் காரணமாகச் சென்று விடுவதால், அவர்களை பொது மக்கள் சந்தித்து முறையீடு செய்வது சிரமமாக உள்ளது.
மேலும் வயதானவர்கள், ஏழைகள், தாலுகா அலுவலகத்துக்கு வந்து செல்வதும் சிரமமாக உள்ளது. வருவாய்த் துறையின் புதிய திட்டப்படி, வாரத்தில் ஒருநாள் குறிப்பிட்ட ஊராட்சியில் வருவாய்த் துறை சார்பில் அதிகாரிகளும், அலுவலர்களும் முகாமிடுவார்கள்.
அங்கு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டாக்கள், வீட்டு மனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு, ஜாதி சான்றிதழ்கள் ஆகியவற்றை முகாமின்போது சம்பந்தப்பட்ட ஊராட்சியிலேயே ஆய்வு செய்து உடனடியாக வழங்க வழி செய்யப்படும்.
இவைதவிர ரேஷன் அட்டை, குடிநீர் பிரச்னைகள், நிலம் தொடர்பான பிரச்னைகளும் நேரில் ஆய்வு செய்யப்பட்டு தீர்வு காணப்படும் என வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
