ஜல்லிக்கட்டு வேடிக்கையில் மறக்கப்படும் ஒலிம்பிக் சுடர்கள்!

உலக அளவில் ஜல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூரில் காளைகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், விளையாட்டில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை
Updated on
2 min read

உலக அளவில் ஜல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூரில் காளைகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், விளையாட்டில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை என்ற ஆதங்கம் அப் பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.
 இன்னும் சில தினங்களில் ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் நடைபெறவுள்ளது. இதைக் காண வெளிநாட்டவர் ஏராளமானோர் வருகை தருகின்றனர். தமிழரின் பாரம்பரிய விளையாட்டாக அது கருதப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது, இப் பகுதியினர் உச்ச நீதிமன்றம் வரை சென்று அனுமதி பெற்றதிலிருந்தே அந்த விளையாட்டின் மீதான அப் பகுதியினரின் பற்றுதலைப் புரிந்து கொள்ளலாம். மாவட்ட நிர்வாகமும் ஜல்லிக்கட்டுக்காக ஆண்டுதோறும் ரூ.15 லட்சம் வரை செலவிடுகிறது.
 வீரம் செறிந்த இளைஞர்கள் காளைகளை அடக்கும் விளையாட்டுக்குத் தரும் முக்கியத்துவம் வரவேற்கத்தக்கதே. அதே நேரத்தில் பிற விளையாட்டுகளில் சாதனை படைத்துவரும் மாணவர்களையும் நாம் மறந்துவிடக் கூடாதல்லவா?
 அலங்காநல்லூரில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட அரசுப் பள்ளியானது தற்போது மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்ந்துள்ளது. அதில் 1120 மாணவர்கள் பயில்கின்றனர். இதில் பெரும்பாலானோர் படிப்பிலும், விளையாட்டிலும் சாதனை படைத்து வருகின்றனர்.
 சமீபத்தில் மதுரை மண்டல பள்ளிகள் அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் இப் பள்ளி மாணவர்கள் 36 தங்கம், 20 வெள்ளி, 19 வெண்கலம் என 75 பதக்கங்களுக்கு உரிய தகுதியைப் பெற்றுள்ளனர். ஆனால், இவர்களுக்கு சான்றிதழ் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. பதக்கம் அளிக்கப்படவில்லை.
 இதுமட்டுமல்ல, இப் பள்ளி மாணவர்கள் கடந்த 15 ஆண்டுகளில் குத்துச்சண்டை, நீச்சல், டேக்வாண்டோ, ஜூடோ, ஸ்குவாஷ் ஆகிய போட்டிகளில் மாநில, தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகிச் சென்றுள்ளனர். 2007-ல் ஜூடோவுக்கு ராமச்சந்திரன் உள்ளிட்ட 4 பேரும், 2008-ல் குத்துச்சண்டை போட்டிக்கு ஆறுமுகம், பாலசுப்பிரமணி உள்ளிட்ட 3 பேரும் தேசிய அளவில் தேர்வு பெற்றுள்ளனர். ஆனால், போதிய பயிற்சி இன்மையால் அவர்களால் ஜொலிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
 பள்ளியில் குத்துச்சண்டைக்கான மேடை அமைக்கப்பட்டிருந்தும் அதில் போட்டி நடத்த மாவட்ட நிர்வாகமோ, இப் பகுதியினரோ பொருளுதவி செய்யவில்லை என்பதே மாணவர்களது ஆதங்கம். கூடைப்பந்தாட்ட மைதானமிருந்தும், அதில் பந்தை போடுவதற்குரிய கூடை அமைப்பு இல்லை. பள்ளி உடற்கல்வி அறையின் நிலையோ படுமோசம். ஓட்டப்பயிற்சிக்காக வாங்கப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்புடைய டிரட்மில் சாதனம் மின்சார வசதியின்றி துருப்பிடித்து கிடக்கிறது. ரூ.2.50 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட உடற்பயிற்சிக்கான நவீன சாதனங்கள் பயன்படுத்த இடமின்றி குப்பைபோல குவிக்கப்பட்டுள்ளன.
 ஆர்வத்துடன், கடும் பயிற்சி மேற்கொள்ளும் தங்களுக்கு விளையாட்டுச் சாதனங்களைப் பயன்படுத்த போதிய வசதி ஏற்படுத்தித் தந்தால் உலக அளவிலான போட்டிகளில் சாதிக்க முடியும் என்கிறார்கள் அந்த ஏழை மாணவர்கள்.
 காளைளை அடக்குவதன் மூலம் உலகத்துக்கு தங்களது வீரத்தைப் பறைசாற்றுவதாகக் கூறும் அலங்காநல்லூர் மக்கள், ஒலிம்பிக் ஜோதியை ஏந்தத் துடிக்கும் தங்களது பிள்ளைகளுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு தயங்குவது ஏனோ?
 சாதிக்கத் துடிக்கும் அந்த இளம் பிஞ்சுகளுக்கு உரிய விளையாட்டு பயிற்சிக்கான அடிப்படை வசதிகளை அமைத்துத் தந்தால் எதிர்காலத்தில் நிச்சயம் ஒலிம்பிக் வரை சென்று பதக்கம் பெறுவார்கள். அவர்கள் பெறுகிற அந்தப் பதக்கம் அலங்காநல்லூருக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கும், ஏன் நாட்டுக்கும் உலக அளவில் உயர்ந்த இடத்தைப் பெற்றுத்தரும். இதை சம்பந்தப்பட்டவர்கள் எப்போது உணர்வார்கள் என்பதே தற்போதைய கேள்வி!
 தேர்ச்சி விகிதத்திலும் சாதனை
 அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பத்தாம், பிளஸ் 2 பொதுத் தேர்விலும் தற்போது சாதனை படைத்து வருகின்றனர். கடந்த 2009-2010 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 53 சதம் தேர்ச்சியும், அதே ஆண்டில் பிளஸ் 2 தேர்வில் 73 சதம் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.
 கடந்த 2010-2011இல் பத்தாம் வகுப்புத் தேர்வில் 91 சதமும், அதே ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 83 சதமும் தேர்ச்சியும் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு (2011-2012) பத்தாம் வகுப்புப் தேர்வில் 90 சதமும், பிளஸ் 2-வில் 87 சதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 அதாவது மிகவும் வறிய குடும்பத்து பிள்ளைகளான இப் பள்ளி மாணவர்கள் படிப்பிலும், விளையாட்டிலும் சிறந்தே விளங்கி வருகின்றனர். ஆனால், பள்ளியில் உரிய நூலகமில்லை. இதனால் தங்களால் ஓய்வு நேரங்களில் கூட பொது அறிவு உள்ளிட்ட நல்ல நூல்களைப் படிக்க வாய்ப்பில்லை என்றும் ஆதங்கப்படுகின்றனர்.
 பள்ளியில் கழிப்பறை, குடிநீர் வசதி போதிய அளவில் இல்லை. சத்துணவு சமைக்கும் கூடம் மேற்கூரை இடிந்திருப்பதால் வெட்ட வெளியிலேயே உணவு சமைக்கப்படுகிறது. காளைகளை வைத்து பெருமைப்படும் இப் பகுதியினரும், மதுரை மாவட்ட நிர்வாகமும், ஜல்லிக்கட்டுக்காக ஆண்டுதோறும் செலவிடும் ரூ.15 லட்சத்தை ஒரே ஒருமுறையாவது இப் பள்ளிக்குச் செலவிட்டு, போதிய அடிப்படை வசதிகளை அமைக்க வேண்டும். அதன்மூலம் இப் பள்ளி மாணவர் மாநில, தேசிய ஏன், உலக அளவில் விளையாட்டில் சிறந்து விளங்க வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com