விருதுநகர் மொத்த வியாபாரியிடம் உளுத்தம் பருப்பு உடைத்து தருவதாகக் கூறி ரூ.79 லட்சம் ஏமாற்றி மோசடி செய்த அரவை ஆலை உரிமையாளர் உள்பட 3 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் ஐ.சி.ஏ காலனியைச் சேர்ந்த ஆர்.சக்திவேல்ராஜா. இவர் விருதுநகரில் தன்னுடைய பெயரிலும், மனைவி பெயரிலும் உளுத்தம் பருப்பு, மாட்டுத் தீவனம், வேப்பம் புண்ணாக்கு ஆகியவைகளை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வாங்கி மொத்த வியாபார தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் விருதுநகரைச் சேர்ந்த தர்மர் நாடார் என்பவரின் மகன் பிரபாகர் விருதுநகர்-அருப்புக் கோட்டை சாலையில் பருப்பு உடைக்கும் ஆலை நடத்தி வருகிறார். அதேபோல், இவரது மகன் சிவசுப்பிரமணியன் பெயரிலும், மனைவி வெண்ணிலா பெயரிலும் இதே நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் கணக்காளர் நாகேந்திரன், மேலாளர் ஹரிஹரன் மற்றும் மேற்பார்வையாளர் சாரதி ஆகியோர் சக்திவேல்ராஜாவை அணுகி உளுத்தம் பருப்பு அனுப்பி வைத்தால் குறைந்த விலையில் அரைத்து தருவாதக பேரம் பேசினார்களாம்.
அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் தற்போது வரையில் 1457 டன் வரையில் பல்வேறு தேதிகளில் உளுத்தம் பருப்பு மூட்டைகளை அரைப்பதற்காக அனுப்பி வைத்தாராம். இதற்கு 1 கிலோவிற்கு ரூ.1.50 வீதம் கூலியாக மொத்தம் ரூ.27 லட்சம் பல்வேறு தவனைகளில் வங்கிகளிலிருந்தும், ரொக்கமாகவும் கூலியாக வழங்கியுள்ளார். ஆனால் இதுவரையில் 969 டன் பருப்பினை உடைத்துக் கொடுத்துள்ளனர். அதையடுத்து, 488 டன் பருப்பை உடைத்துக் கொடுக்காமல் மேற்குறிப்பிட்டவர்கள் தாமதம் செய்து வந்தனர். மேலும் இது குறித்து விசாரித்ததில் ஆலையில் இறக்கிய மூட்டைகளை, இவருக்கு தெரியாமல் வெளி நபருக்கு கூடுதலாக ரூ.70 லட்சத்திற்கு விற்று கையடால் செய்துள்ளனர். அதோடு, இதற்கு உடைப்பு கூலியாக பெற்ற ரூ.9 லட்சமும் சேர்த்து மொத்தம் ரூ.79 லட்சத்தை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர்.
இது தொடர்பாக சக்திவேல்ராஜா மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் இன்று புகார் செய்தார். அதன் அடிப்படையில் பருப்பு உடைப்பு ஆலையின் உரிமையாளர் சிவசுப்பிரமணியன்(34), மேலாளர் ஹரிஹரன்(39), கணக்காளர் நாகேந்திரன்(40) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த மோசடியில் தொடர்புடைய மேற்பார்வையாளர் சாரதி தலைமறைவானது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.