கொசுத் தொல்லையில் இருந்து பொது மக்களை பாதுகாக்கும் வகையில் ராணுவம் தயாரித்துள்ள வலை மற்றும் மருந்து விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் முதுநிலை மேலாண்மை இயக்குநர் ஜவகர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று இந்திய பூச்சியியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜவகர், டெங்கு பாதிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கில் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
டெங்கு பாதிப்பை மக்கள் உணர வேண்டும். டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள், தங்களது திறனை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருப்பதால் அவற்றை அழிப்பது கஷ்டம். எனவே, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு சுகாதாரத் துறை சிறப்பாக செயல்படுகிறது. எந்த பிரச்னை என்றாலும், விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களை பாதுகாக்கின்றது.
என்று தெரிவித்தார்.
மேலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தன்னாட்சி பெற்ற கழகமாகும். இதில் 1000க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் உள்ளனர். இந்திய ராணுவ ஆராய்ச்சி மையமும், மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் சேர்ந்து புது வகை கொசு வலையையும், புது கொசு மருந்தையும் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 10 ஆண்டு கால ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட இவை, 3 ஆண்டுகளாக பரிசீலனையில் உள்ளன. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விற்பனை க்கு வர உள்ளது.
பக்க விளைவுகள் இல்லாத வகையிலும், அந்த மருந்தில் விஷத் தன்மை இல்லாத வகையிலும், கொசுக்களை கொல்லாமல் விரட்டி அடிக்கும் வகையில் கொசு வலையும், மருந்தும் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவைகள் பயன்பாட்டுக்கு வந்தால், அது பொதுமக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.