மகப்பேறு அறுவைசிகிச்சைக்கு பிறகு பெண் சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

கடலூரில் பிரசவத்தின்போது தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பெண் இறந்தார். இதனைக்கண்டித்து உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Updated on
2 min read

கடலூரில் பிரசவத்தின்போது தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பெண் இறந்தார். இதனைக்கண்டித்து உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 கடலூர் அருகே மேற்குராமாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(35). விவசாயி. இவரது மனைவி வாசுகி(30). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரை பிரசவத்துக்காக வியாழக்கிழமை காலை 10.45 மணிக்கு கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.

 12 மணியளவில் மகப்பேறு பிரிவில் சேர்க்கப்பட்டார். நள்ளிரவு 12.20 மணிக்கு டாக்டர் மாலதி தலைமையிலான குழுவினர் வாசுகிக்கு அறுவை சிகிச்சை செய்து பெண் குழந்தையை வெளியே எடுத்தனர். தொடர்ந்து தாய், சேய் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு வாசுகி திடீரென உயிர் இறந்தார். தகவல் அறிந்த கணவர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். வாசுகிக்கு ரத்தத்தை மாற்றி ஏற்றியதாகவும், தவறான சிகிச்சை காரணமாகவே அவர் உயிர் இழந்ததாகவும் குற்றம் சாட்டிய அவர்கள் சடலத்தை வாங்க மறுத்து மகப்பேறு பிரிவை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் பால்சுதர் விசாரணை நடத்தினார்.

 இதுகுறித்து வாசுகியின் கணவர் வெங்கடேசன் கூறியது, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் இருந்து வாசுகிக்கு ரத்தம் தேவைப்படுவதாக எங்களிடம் சொல்லவில்லை. இந்நிலையில் அறுவை சிகிச்சை சமயத்தில் உடனடியாக ரத்தம் வேண்டி என்னை அழைத்து சென்றார்கள். ரத்த வங்கியில் ஒரு மணி நேரம் காத்திருந்தேன். ஆனால் என்னிடம் ரத்தம் சேகரிக்கவில்லை. கேட்டதற்கு வேறு ரத்தம் ஏற்றி விட்டோம் என்று சொன்னார்கள்.

 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் மீண்டும் ரத்தம் ஏற்றினார்கள். அதுவரை நன்றாக இருந்த வாசுகி திடீரென்று உயிர் இழந்தார். தவறான சிகிச்சையாலும், ரத்தம் மாற்றி ஏற்றியதாலும் என்னுடைய மனைவிó இறந்துவிட்டார். என் மனைவி சாவுக்கு உரிய நீதி வேண்டும். அலட்சியப்போக்கோடு நடந்துகொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், அறுவை சிகிச்சையின் போது வாசுகிக்கு ரத்தம் உறையும் தன்மை திடீரென்று குறைந்து விட்டது. ரத்தப்போக்கை நிறுத்த முடியவில்லை. அறுவை சிகிச்சையின் போது ஒரு யூனிட் ஏ பாசிட்டிவ் ரத்தம் ஏற்றினோம். தொடர்ந்து ரத்தம் நிற்காததால் வெள்ளிக்கிழமை காலை ரத்தத்தை உறைய செய்யும் பிரஸ் ரோஸ் பிளாஸ்மா ஒரு யூனிட் ஏற்றினோம். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். எதிர்பாராமல் நடந்த சம்பவம் என்றனர்.

 இந்நிலையில் 2 மணி வரை போராட்டம் தொடர்ந்த நிலையில், வாசுகியின் உடல் அரசு மருத்துவமனை சவ கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூறு பரிசோதனைக்கு பிறகு சனிக்கிழமை ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது. குழந்தைக்கு இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பணம் பிடுங்கிய மருத்துவ ஊழியர்கள்

.வாசுகியின் தாய் தனக்கண்ணு, தந்தை சந்திரகாசன் கூறுகையில், வியாழக்கிழமை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்தபோது, அங்கு மருத்துவ ஊழியர்கள் சீட்டு எழுத 20 ரூபாய், பதிவு செய்ய 20 ரூபாய் வாங்கினார்கள், 300 ரூபாய் வாங்கி கொண்டுதான் வார்டில் சேர்த்தனர். 2 செக்யூரிட்டிகளுக்கு தலா 30 ரூபாய் கொடுத்தோம்.

 அறுவைசிகிச்சைக்கு அழைத்து செல்வதற்காக முன்பு உடை மாற்றுவதற்கு 100 ரூபாய் கேட்டார்கள், அப்போது கொடுப்பதற்கு பணம் இல்லை என்று கூறினோம். அதற்கு மிகவும் கேவலமாக பேசினர். பின்னர் அறுவைசிகிச்சை செய்வதற்கு தனியாக 1000 ரூபாய் வாங்கிக்கொண்டார்கள். பணத்தையும் கொடுத்து, ஊழியர்களின் அநாகரீகமான பேச்சையும் கேட்டுக்கொண்ட பிறகும், எங்களது மகளை பறிகொடுத்து விட்டோம். தவறான சிகிச்சையால் மகளை அநியாயமாக கொன்று விட்டார்கள் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com