பச்சிளம் பெண் குழந்தையை விற்க முயற்சி: தரகருடன் இரு குடும்பத்தினர் சிக்கினர்

நாமக்கல் அருகே பிறந்து இரு நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தையை விற்க முயன்றபோது தரகர் உள்பட இரு குடும்பத்தினர் போலீஸாரிடம் பிடிபட்டனர். அவர்களிடம் சேந்தமங்கலம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Updated on
1 min read

நாமக்கல் அருகே பிறந்து இரு நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தையை விற்க முயன்றபோது தரகர் உள்பட இரு குடும்பத்தினர் போலீஸாரிடம் பிடிபட்டனர். அவர்களிடம் சேந்தமங்கலம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த குணசேகரன்(48). இவருக்கு ஏற்கனவே இரு பெண்கள் உள்ள நிலையில் ஆண் குழந்தையை தத்தெடுக்க திட்டமிட்டுள்ளார்.  இவரது அக்கா ராசிபுரம் பட்டணம் சாலையைச் சேர்ந்த குழந்தைவேலின் மனைவி மல்லிகா(50) கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அதன்படி, கோயிலுக்கு வந்து செல்கையில் மல்லிகாவுக்கு கொல்லிமலை கரையாங்காட்டைச் சேர்ந்த லட்சுமி(36) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் ஆண் வாரிசு இல்லாத குணசேகரன் குடும்பத்துக்கு ஆண் குழந்தை கிடைத்தால் வாங்கித் தரும்படி மல்லிகா கூறினராம்.

இந்நிலையில், கொல்லிமலை வாழவந்திநாடு சேப்பங்குளத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி ரமேஷ்(38), வசந்தா(36) தம்பதிக்கு ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் மூன்றாவதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது.  அந்த குழந்தையை வளர்க்க இயலாத நிலையில் லட்சுமியின் உதவியை நாடியுள்ளனர்.

இதையடுத்து, லட்சுமி அந்த குழந்தையை குணசேகரனுக்கு விற்க முடிவு செய்து சனிக்கிழமை மாலை காரில் ராசிபுரத்துக்குச் எடுத்துச் சென்றுள்ளார். செம்மேடு அருகே அந்த கார் விபத்துக்குள்ளாகியதை அடுத்து குழந்தையை கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தவர்களின் காரில் உதவி கேட்டு கொண்டு வந்துள்ளார். ஆனால், வழியிலேயே அந்த குழந்தை கடத்தப்படுவதை அறிந்துகொண்ட சுற்றுலா பயணிகள் கொல்லிமலை அடிவாரம் காரவள்ளியிலுள்ள சோதனைச் சாவடியில் குழந்தையுடன் லட்சுமியை ஒப்படைத்துவிட்டுச் சென்றனர்.

அங்கு லட்சுமியிடம் விசாரணை நடத்திய போலீஸார், பின்னர் மல்லிகா, குணசேகரன் குடும்பத்தினரை தொலை பேசியில் தொடர்பு கொண்டு வரவழைத்துள்ளனர். அங்கு வந்த குணசேகரன் குடும்பத்தினர் தங்களுக்கு ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் ஆண் குழந்தையை மட்டுமே எதிர்பார்த்தோம். ஆனால், வேறு யாருக்கோ லட்சுமி பெண் குழந்தையை விற்க முயன்று நாடகமாடுவதாகக் கூறியுள்ளனர்.

இதையடுத்து, குழந்தையுடன் லட்சுமி, குணசேகரன், மல்லிகா, அவரது கணவர் குழந்தைவேல் ஆகியோர் சேந்தமங்கலம் காவல்நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர். தொடர்ந்து, சேந்தமங்கலம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சிளம் பெண் குழந்தையை விற்க முயன்று போலீஸாரிடம் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com