மதுரை: அடகுக்கடையில் ரூ.60 லட்சம் நகை கொள்ளை

மதுரை நகை அடகுக்கடையில் சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள நகைகள் வியாழக்கிழமை கொள்ளையடிக்கப்பட்டன.
Updated on
1 min read

மதுரை நகை அடகுக்கடையில் சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள நகைகள் வியாழக்கிழமை கொள்ளையடிக்கப்பட்டன.

   மதுரை பசுமலைப் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். இவர் பழங்காநத்தம் பசும்பொன்நகர் நீலகண்டன் கோயில் தெருவில் ஹரிகர பைனான்ஸ் எனும் பெயரில் அடகுக்கடை வைத்துள்ளார். கடையில் பசுமலைப் பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டியன் (45) மேலாளராக உள்ளார்.

  இந்தநிலையில், வியாழக்கிழமை பகலில் சுமார் 30 முதல் 38 வயது மதிக்கத்தக்க இருவர் கடைக்கு தங்கத் தோடை அடகுவைக்கவேண்டும் எனக்கூறி வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் கைலி கட்டியிருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களிடம் தெரிந்தவர்கள் இருந்தாலே நகையை அடகு வாங்கமுடியும் என துரைப்பாண்டியன் கூறியுள்ளார். உடனே வந்தவர்களில் ஒருவர் வெளியே சென்றுள்ளார். 

  அப்போது அவர்கள் கொண்டுவந்த தங்கத் தோடை சரிபார்க்க துரைப்பாண்டி முயன்றுள்ளார். உடனே வந்தவர்களில் ஒருவன் துரைப்பாண்டியின் கைகளை முதுகுப்பக்கமாகத் திருப்பி பிடித்துக்கொண்டதாகவும், மற்றொருவன் கையை அங்கிருந்த துணியால் கைகளைக் கட்டியதுடன், வாயில் கர்சீப்பைத் திணித்து மிரட்டித் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.பின்னர் திறந்திருந்த லாக்கரில் இருந்த நகைகளை வெள்ளைச்சாக்கில் அளிக்கொண்டு ஓடிவிட்டனர்.

  மர்மநபர்கள் தாக்கியதில் துரைப்பாண்டிக்கு வலது கை, இடது கை மேற்பகுதி மற்றும் வயிற்றுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டன. மர்மநபர்கள் சென்றநிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வந்து துரைப்பாண்டியின் கைக்கட்டை அவிழ்த்துவிட்டுள்ளார். அதன்பிறகே கொள்ளைச் சம்பவம் தெரியவந்துள்ளது. இதையடுத்து துரைப்பாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

   சம்பவ இடத்துக்கு மாநகர் காவல் ஆணையர் பொறுப்பு வகிக்கும் தென்மண்டல காவலத்துறைத் தலைவர் அபய்குமார்சிங் மற்றும் மாநகர் சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் சமந்த் ரோஹன்ராஜேந்திரா ஆகியோர் வந்து விசாரித்தனர்.  போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. தடயவியல் துறையினர் வந்து கைரேகைகளை சேகரித்தனர்.

   மர்மநபர்கள் நடந்துவந்து கொள்ளையடித்த நகைகளுடன் மோட்டார் சைக்கிளில் தப்பியதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த கடை மேலாளர் துரைப்பாண்டியிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது துரைப்பாண்டி பதட்டமின்றி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.60 லட்சம் எனக்கூறுவதாகவும், எத்தனை பவுன் என கூறவில்லை என்றும் போலீஸார் கூறினர்.

  கடை மற்றும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளையர் படம் பதிவாகியுள்ளதா என போலீஸார் விசாரித்துவருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com