மதுரையில் அடகுக்கடையில் கொள்ளைபோன 462 பவுன் நகைகள் மற்றும் 9 கிலோ வெள்ளிப்பொருள்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. மேலும், கொள்ளைச் சம்பவத்தை நடத்திய கடை மேலாளரின் நாடகமும் அம்பலத்துக்கு வந்துள்ளது.
மதுரை பசுமலையைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். பழங்காநத்தம் பகுதியில் ஹரிஹர பைனான்ஸ் எனும் பெயரில் நகை அடகுக்கடை வைத்துள்ளார். இதில் மேலாளராக சோழவந்தானைச் சேர்ந்த துரைப்பாண்டியன் (43) இருந்தார். கடந்த 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பகலில் கடைக்குள் புகுந்த 2 பேர் துரைப்பாண்டியைத் தாக்கி சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.தாக்குதலில் காயமடைந்த துரைப்பாண்டி பதற்றமின்றி இருந்தது போலீஸாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மாநகர் சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் சமந்த்ரோஹன் ராஜேந்திரா, நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் கிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தபோது அவர் மீதான சந்தேகம் உறுதியானது.
மாநகர் குற்றபிரிவு துணை ஆணையர் தமிழ்சந்திரன் உத்தரவில் நகர் குற்றப்பிரிவு உதவி ஆணையர் வி.மலைச்சாமி தலைமையில் தனிப்படையினர் விசாரித்தனர். கடையில் இருந்த கண்காணிப்புக் காமிராவின் டிஸ்க் கழற்றப்பட்டிருப்பது, துரைப்பாண்டி காணாமல் போனது தெரியவந்தது. மேலும், அவரது செல்போன் காணவில்லை எனக்கூறப்பட்ட நிலையில், சோழவந்தான் பகுதியில் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து நடந்த விசாரணையில் துரைப்பாண்டி உள்ளிட்டோர் கொள்ளையில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. பல ஆண்டுகளாக பணியிலிருக்கும் துரைப்பாண்டிக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வப்போது கடையில் பணம் எடுத்து செலவழித்துள்ளார். இதை செந்தில்நாதன் கண்டுகொள்ளவில்லை. ஆகவே கொள்ளைக்குத் திட்டமிட்டுள்ளார்.சட்டக்கல்லூரியில் படிக்க சோழவந்தான் வழக்குரைஞருக்கு துரைப்பாண்டி உதவியுள்ளார். வழக்குரைஞரின் நகையையும் ஹரிஹர பைனான்ஸில் அடகும் வைத்துள்ளனர். ஆகவே கொள்ளைக்கு வழக்குரைஞர் உதவியதாகவும் கூறப்படுகிறது.
வழக்குரைஞரிடம் வழக்குத் தொடர்பாக வரும் விளாம்பட்டி பாலமுருகன் என்பவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் அடகுக்கடைக்கு வந்து துரைப்பாண்டியைத் தாக்குவது போல நடித்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.தற்போது துரைப்பாண்டி அளித்த தகவல்படி சுமார் ரூ.1 கோடி மதி்ப்புடைய 462 பவுன் நகை மற்றும் கொலுசு உள்ளிட்ட 9 கிலோ வெள்ளி மீட்கப்பட்டுள்ளது. பாலமுருகன, அவரது நண்பரைப் பிடிக்க போலீஸார் விரைந்துள்ளனர். சம்பவத்தில் 4 பேர் மட்டுமே ஈடுபட்ட நிலையில் அனைவரையும் கைது செய்து நகைகள் முழுமையாக மீட்கப்பட்டிருப்பதை அடுத்து தனிப்படையினரை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.