

கும்பகோணம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மகாமக குளம் அருகில் பொதுமக்கள் மற்றும் யாத்ரீகர்களின் வசதிக்காக தங்கும் விடுதி நகராட்சியால் ரூ108.21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
இந்த தங்கும் விடுதியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இது குறித்து நகர்மன்ற தலைவர் ரத்னாசேகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இப்பயணியர் விடுதி தமிழக நகராட்சிகளில் முதன்முறையாக வருமானத்தை பகிர்ந்து கொள்ளும் அடிப்படையில் பராமரிப்பிற்கு விடப்பட்டுள்ளது. பராமரிப்பவருக்கு வருமானத்தில் 60 சதவீதமும், நகராட்சிக்கு 40 சதவீதமும் ஆகும். கட்டிடம், லிப்ட், ஜெனரேட்டர் மற்றும் சோலார் வாட்டர் ஹீட்டர் வசதியுடன் நகராட்சியால் கட்டப்பட்டு பயணியர் வ¤டுதிக்கான கூடுதல் வசதிகள் (பால்ஸ் சீலிங், ஏ/சி,கட்டில், மெத்தை, நிழற்கொட்டகை, தொலைக்காட்சிப்பெட்டி மற்றும் அறைகலன்கள்) பராமரிப்பவரால் செய்யப்பட்டுள்ளது. இப்பயணியர் விடுதியில் உணவகம் நடத்திக் கொள்ளத் தேவையான வசதிகளும் பராமரிப்பவரால் செய்யப்பட்டுள்ளது.
பராமரிப்பாளர் தினசரி நகராட்சியின் பங்குத் தொகையான 40 சதவீதத் தொகையினை இதற்கெனவுள்ள வங்கிக் கணக்கில் செலுத்தி விடுவார். அறை ஒதுக்கீடு அனைத்தும் கணினியில் ஆன்லைனில் செய்யப்படும்.
இப்பயணியர் தங்கும் விடுதியில் முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட 2 நபர் தங்கும் அறைகள் மூன்று உள்ளது. இதற்கு நாள் வாடகையாக ரூ. 900 வசூலிக்கப்படும். 4 நபர்கள் தங்கும் அறைகளுக்கு நாள் வாடகைகளுக்கு ரூ1200 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 9 நபர்கள் தங்கும் அறை மற்றும் 19 நபர்கள் தங்கும் அறை உள்ளது. இந்த அறைகளில் ஒரு நபருக்கு தலா ரூ. 200 வீதம் வசூலிக்கப்படும். இந்த தங்கும் விடுதியில் மொத்தம் 52 பேர் தங்கக்கூடிய வசதியுடையது என்றார்.
முன்னதாக தங்கும் விடுதியை முதல்வர் திறந்த நேரத்தில் இங்கு நகர்மன்ற தலைவர் ரத்னாசேகர் குத்துவிளக்கேற்றினார். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் ராஜாநடராஜன், ஆணையர் எஸ்.கலைச்செல்வன் மற்றும் நகராட்சி அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.