சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சிறப்பு மையத்திற்கு (Special Cell) நிர்வாகப் பணிக்கு கூடுதல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு்ள்ளனர் என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் தெரிவித்தார்.
சிதம்பரத்தில் அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடையே தெரிவித்தது: அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் கணக்கு பணிகளை மேற்கொள்ள எனக்கு உதவியாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்திற்கு (Special Cell) இரண்டு மாவட்ட வருவாய் அலுவலர்கள், முதன்மை கணக்கு அலுவலர் ஒருவர், கணக்காளர்கள் இருவர், வட்டாட்சியர்கள் இருவர் மற்றும் 10 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கண்காணிப்பு குழுவிற்கு (Inspection Squard) ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அதிகாரி ஸ்ரீமாலினி தலைமையில் ஓய்வு பெற்ற வட்டாட்சியர்கள் இருவர் மற்றும் துணை வட்டாட்சியர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழக உயர்கல்வித்துறை மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்கலைக்கழகத்திற்கு பொது மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை இணைஇயக்குநர் ஒருவரும், சட்டத்துறை துணைச் செயலாளர் ஒருவரும் நியமிக்கப்படவுள்ளனர் என ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் தெரிவித்தார்.