பிரசவத்தில் மனைவி இறந்ததை அடுத்து அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பெண்ணின் கணவன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றார். போலீஸார் தடுத்து அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரகாஷின் மனைவி லட்சுமி (33). பிரசவத்துக்காக நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி சேர்க்கப்பட்டார். அவருக்கு அன்று பிற்பகல் அறுவைச் சிகிச்சை மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. அதே நாள் மாலையில் அதிகளவில் ரத்தப் போக்கு ஏற்பட்டு லட்சுமி உயிரிழந்தார். இச்சம்பவத்துக்கு அரசு மருத்துவர்கள், செவிலியர்களின் கவனக்குறைவே காரணம் என தெரிவித்த பிரகாஷ், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதுடன் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றுச் செல்லவும் மறுத்துவிட்டார்.
அவ்விரு குழந்தைகளும் 25 நாட்களாக மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டிருந்த நிலையில், பிரசவம் பார்த்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீது விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக மருத்துவமனை உயரதிகாரிகள் அளித்த வாக்குறுதியை ஏற்று பிரகாஷ் அக்குழந்தைகளை பெற்றுச் சென்றார்.
மருத்துவமனை உயரதிகாரிகள் அளித்த வாக்குறுதிப்படி நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பிரகாஷ், தீக்குளிக்க மண்ணெண்ணெய் பாட்டிலுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்திருந்தார். அவரை போலீஸார் தடுத்து மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பிரகாஷ் கூறியது: பிரசவத்துக்கு பிறகு வலிப்பு ஏற்பட்டு லட்சுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உண்மையில் அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையாலேயே அவர் இறந்துள்ளார். இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் மருத்துவமனை உயரதிகாரிகள் மறுத்து வருகின்றனர். இதுகுறித்து மருத்துவமனை உயரதிகாரிகள், ஆட்சியரிடமும் ஏற்கனவே மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க திட்டமிட்டு வந்தேன். மாவட்ட நிர்வாகம் இனியும் காலம் தாழ்த்தாமல் விசாரணையை தொடங்க வேண்டும். தவிர, இரட்டை ஆண் குழந்தைகளை வளர்க்க அரசு தேவையான உதவிகளையும் செய்திட வேண்டும் என்றார் அவர்.
பின்னர், ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர், பிரகாஷின் மனைவி லட்சுமி பிரசவத்தின்போது இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திட சமூக நலத்துறை அலுவலருக்கு உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.