திருச்செந்தூரில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா: லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர நடந்தது

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது, விழாவில் லட்சக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை
Updated on
2 min read

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது, விழாவில் லட்சக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

ஆறு படைவீடு கொண்ட தமிழ்க்கடவுள் முருகனுக்கு முக்கிய திருவிழாக்களில் முதலாவதாக கொண்டாடப்படுவது கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவாகும். இத்திருவிழா திருச்சீரலைவாய் என்றழைக்கப்படும் திருச்செந்தூரில் நடந்ததாக தல வரலாறு கூறுகிறது. இப்பேறு கொண்ட கந்த சஷ்டி விழா திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த ஞாயிற்றக்கிழமை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா வெள்ளிக்கிழமை நடந்தது. விழாவை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபதரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, காலை 4 மணிக்கு கால சந்தி பூஜையும் நடைபெற்றது. காலை 7.00 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளினார். அங்கு ஹோமங்கள் நடந்து, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவரான சுப்பிரமணியருக்கு  சஷ்டி சிறப்பு தீபாராதனையும், உச்சிகால தீபாராதனையும் நடந்தது. அதன்பின் யாகசாலையில் இருந்த ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனையாகி சுவாமி அம்பாளுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாசம் வந்தார்;. அங்கு மகா தீபாராதனையாகியது. அதன்பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் திருவாவடுதுறை ஆதீன கந்த சஷ்டி மண்டபத்திற்கு வந்து, அங்கு வைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் சர்வ அலங்காரமாகி மாலை 4.35 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் சூரசம்ஹாரத்திற்கு புறப்பட்டார்.

முன்னதாக சூரபத்மன் தனது பரிவாரங்களுடன் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். முதலில் கடற்கரையில் மாலை 5.20 மணிக்கு கஜ முக சூரசம்ஹாரம் நடைபெற்றது. இரண்டாவதாக மாலை 5.40  மணிக்கு ஆணவம் அடங்காத சூரபத்மன் சிங்கமுகமெடுத்து அமைதியின் திருஉருவமான முருகப்பெருமானை மூன்று முறை சுற்றி வந்து போர் புரிந்தான். முருகன் தனது வேலால் சிங்கமுக சூரனை வதம் செய்தார். மூன்றாவதாக மாலை 5.55 சூரபத்மன் தனது சுயரூபத்துடன் போர் புரிய வந்தார். அவரை முருகப்பெருமான் வதம் செய்தார். ஆணவம் அடங்காத சூரபத்மன் கடைசியாக மாலை 6.10 மணிக்கு மாமரமாக உருவெடுத்து மீண்டும் போருக்கு வந்தான். சூரபத்மனின் ஆணவத்தை ஆட்கொண்டு அவனை சேவலாகவும், மயிலாகவும் உருமாறச் செய்தார்.

ஓவ்வொரு முறையும் முருகப்பெருமான் சூரபத்மனிடம் போர் புரியும் போது வானில் கருடன் வட்டமிட்டதைக் கண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் பக்திப்பரவசத்தில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணை முட்டியது.விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் ப.தா.கோட்டைமணிகண்டன், இணை ஆணையர் (பொ) இரா.ஞானசேகர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

சூரசம்ஹார நிகழ்ச்சியில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு மணி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால், மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார், தமிழக ஊரக வளர்ச்சித்துறை செயலர் பழனியப்பன், நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித் சரண் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com