விருதுநகர் மாவட்டத்தில் எப்பொருளும் வாங்கதோர் வைத்திருக்கும் வெள்ளை மற்றும் மஞ்சள் நிற குடும்ப அட்டைகளை இணைய தளம் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
தமிழகம் முழுவதும் தற்போது பயன்பாட்டில் உள்ள குடும்ப அட்டைகள் அனைத்தும் டிச- 2013 வரையில் நீட்டிக்கும் வகையில் உள்தாள் இணைத்து வழங்கப்பட்டது. அதேபோல், எப்பொருளும் வேண்டாதோருக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ளை நிற குடும்ப அட்டைகளையும், முகவரி ஆதாரத்துக்காக தட்கல் முறையில் வழங்கப்பட்ட மஞ்சள் நிற குடும்ப அட்டைகளையும் கால நீட்டிப்புச் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில் இந்தக் குடும்ப அட்டைகளையும் இணைய தளம் மூலம் புதுப்பித்து கொள்வதற்கு அரசு உத்தரவிட்டது.
இதுபோன்ற உள்தாள் பதிவுச் சீட்டுக்கள் ஒட்டப்பட்டவைகள் தான் நடைமுறையில் இருக்கும் குடும்ப அட்டைகளாக கருதப்படும். இணைய தள வசதியை பயன்படுத்த இயலாத குடும்ப அட்டைதாரர்கள், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறையால் மாதந்தோறும் நடத்தப்படும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடும்ப அட்டைகளை நவம்பர் மாதம் முதல், அடுத்தாண்டு ஜனவரி 31-ம் தேதிக்குள் வரையில் புதுப்பித்துக் கொள்ளலாம். எனவே இந்த வாய்ப்பை குறிப்பிட்ட நிறமுடைய குடும்ப அட்டைகளை பயன்படுத்துவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.