

அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல் செய்ததை தட்டிக் கேட்ட பார்வையற்ற இளைஞரை தாக்கியதால் காயம் அடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வாய்திருநகரியை சேர்ந்தவர் சங்கரபாண்டி(28). இவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். இவரது தந்தை இசக்கிமுத்து பணியின் போது உயிரிழந்துள்ளார். அதன் அடிப்படையில் வாரிசு வேலை சம்பந்தமாக மதுரை ரயில் நிலையத்திற்கு சென்று சங்க நிர்வாகிகள் மற்றும் அலுவலர்களையும் பார்த்துவிட்டு திரும்பினாராம். அப்போது, மதுரையில் இருந்து திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். இதில், பயணச்சீட்டு ரூ.105 ஆகும். ஆனால், இவர் மாற்றுத்திறனாளி என்பதால் சலுகை கட்டணமான ரூ.27-க்கு பயணச்சீட்டு பெறுவதற்காக நடத்துனரிடம் ரூ.30 கொடுத்துள்ளார். அவர் மீதம் இரண்டு ரூபாய் கொடுத்தாராம். அதையடுத்து, கூடுதலாக வசூல் செய்வது குறித்து தட்டிக் கேட்டதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, திருமங்கலத்தில் இறங்கி பேருந்தை செல்லவிடாமல் முன் அமர்ந்து கொண்டாராம்.
இது தொடர்பாக அப்பேருந்தின் நடத்துனர் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தாராம். அதன் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸார் தாக்கினார்களாம். மாற்றுத்திறனாளியை காவல் நிலையத்தில் வைத்திருந்தால் பிரச்னை ஏற்படக் கூடும் என்பதை அறி்ந்து போலீஸார் திங்கள்கிழமை இரவு 10.30 மணிக்கு நாகர்கோவில் பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், பின்புறம் தாக்கியதால் அமர்ந்து செல்ல முடியாத நிலையில் வேதனையாக இருந்ததால் விருதுநகரில் இறங்கி சங்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்களின் உதவியோடு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மாநில மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் செயலாளர் நம்புராஜன் கூறுகையில், போராட்டம் செய்திருந்தால் முறைப்படியாக கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், மனிதாபிமானமின்றி கண்பார்வையற்றவரை தாக்கியது முறையல்ல கண்டித்தக்க செயலாகும். அதனால், சங்க நிர்வாகிகள் இணைந்து சங்கரபாண்டியை தாக்கிய 7 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சம்பவம் நடந்த பகுதியின் டி.எஸ்.பி அலுவலகத்தில் மனு அளிக்க இருப்பதாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.