சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதியாக பாலகிருஷ்ணா நீடிக்கக்கூடாது: திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மனு

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதியாக பாலகிருஷ்ணா நீடிக்கக்கூடாது என்று வலியுறுத்தி கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எச்.வகேலாவிடம் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பில்
Updated on
1 min read

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதியாக பாலகிருஷ்ணா நீடிக்கக்கூடாது என்று வலியுறுத்தி கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எச்.வகேலாவிடம் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பில் அவரது வழக்குரைஞர்கள் தாமரைச்செல்வன் எம்.பி., சரவணன், நடேசன், குமரேசன், பாலாஜிசிங் ஆகியோர் பெங்களூருவில் வியாழக்கிழமை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி டி.எச்.வகேலா, உயர்நீதிமன்ற நீதிபதிகள், கர்நாடக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து தாமரைச்செல்வன் எம்.பி. கூறியதாவது:

பெங்களூருவில் உள்ள சிறப்புநீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர்மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை நடந்துவருகிறது. இந்தவழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணாவும், அரசு தரப்பு சிறப்பு வழக்குரைஞர் பவானிசிங்கும் இணைந்து வழக்கின் போக்கை மாற்றியமைக்க ரகசியமாக செயல்பட்டுவருவதாக கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எச்.வகேலாவிடம் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பில் புகார் அளித்துள்ளோம்.

மேலும் இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி பாலகிருஷ்ணாவை அனுமதிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம். சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பிறகு அரசு தரப்பின் வாதங்களை அலட்சியப்படுத்தி தன்னிச்சையாக பாலகிருஷ்ணா செயல்பட்டதற்கான ஆதாரங்களை அளித்துள்ளோம். எந்தவொரு வழக்கு விசாரணையிலும் இருதரப்பு வாதங்களை கேட்பது தான் இயற்கையான நீதிபரிபாலனத்திற்கான வழிமுறை. ஆனால், பாலகிருஷ்ணா, குற்றவாளிகள் தரப்புக்கு சாதகமாக பல முடிவுகளை எடுத்து உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் நம்பகத்தன்மையை அவர் இழந்துள்ளார். இது வழக்கின் போக்கை மாற்றியமைக்க காரணமாகிவிடும். தொடக்கம்முதலே பாரபட்சமாக செயல்பட்டுவருவதால், இந்த வழக்கை நீதிபதி பாலகிருஷ்ணா விசாரிக்க அனுமதிக்கக்கூடாது என்று கோரியுள்ளோம். ஒருவேளை இந்தவழக்கை நீதிபதியாக பாலகிருஷ்ணா விசாரித்தால், நீதி கிடைக்காது என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com