சேலம் மாவட்டத்தில் நான்கு வட்டங்களை உள்ளடக்கிய ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி சுமார் 80 கி.மீட்டர் தொலைவுக்கு பரந்து விரிந்துள்ளது.
இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தமிழகத்தில் மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட, இரண்டு தொகுதிகளில் ஏற்காடு ஒரு தொகுதியாகும். தமிழகத்தின் முக்கிய கோடை வாழிடமாக விளங்கும் ஏற்காட்டின் பெயரில் இந்தத் தொகுதி அமைந்திருந்தாலும், தொகுதியின் 6-இல் ஒரு பங்கு வாக்காளர்கள் மட்டுமே ஏற்காட்டைச் சேர்ந்தவர்கள்.
தொகுதியின் எல்லைகள்
ஏற்காடு, வாழப்பாடி, சேலம், ஆத்தூர் ஆகிய 4 வட்டங்களின் பகுதிகளைக் கொண்டுள்ள இந்தத் தொகுதியில் மறு சீரமைப்பின்போது, ஆத்தூர் தொகுதியில் இருந்து சில பகுதிகள் சேர்க்கப்பட்டன. மேலும், கடந்த 2006-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பனைமரத்துப்பட்டி தொகுதியை நீக்கிவிட்டு அந்தத் தொகுதியில் இருந்து சில பகுதிகள் ஏற்காடு தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஏற்காடு வட்டத்தில் உள்ள ஏற்காடு, நாகலூர், கிளியூர், தலைச்சோலை, வெள்ளக்கடை, பட்டிப்பாடி, அரங்கம், வாழவந்தி, கொட்டச்சேடு உள்ளிட்ட 64 வருவாய் கிராமங்களும் ஏற்காடு தொகுதிக்குள்பட்டவை.
சேலம் வட்டத்தில் உடையாப்பட்டி, வேடப்பட்டி, டி.பெருமாபாளையம், சுக்கம்பட்டி, தாதனூர், மூக்கனூர், கத்திரிப்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டி புதூர், ஆச்சாங்குட்டப்பட்டி, குப்பனூர், வெள்ளையம்பட்டி, வலசையூர், பள்ளிப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, வளையக்காரனூர், மேட்டுப்பட்டி தாதனூர், சின்னனூர், தைலானூர், அதிகாரப்பட்டி, வீராணம், கோராத்துப்பட்டி, கற்பகம் உள்ளிட்ட பகுதிகளும் ஏற்காடு தொகுதிக்குள்பட்டவை.
அதேபோல், ஆத்தூர் வட்டத்தில் உள்ள நெய்யமலை, தும்பல், மலையாளப்பட்டி, அருணா, சின்ன கல்ராயன்மலை தெற்கு நாடு ஊராட்சி, சின்ன கல்ராயன்மலை வடக்கு நாடு, தும்பல், தும்பல் வனக் கிராமப் பகுதிகளும், வாழப்பாடி வட்டத்தில் பேளூர், அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சிப் பகுதிகள் உள்ளிட்டவையும் ஏற்காடு தொகுதிக்குள் வருகின்றன.
80 கிலோ மீட்டர் பரந்து விரிந்தது
சேர்வராயன் மலைகளில் உள்ள ஏற்காடு முதல் கல்ராயன் மலைகளில் உள்ள தெற்கு நாடு ஊராட்சி வரையிலும் சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவுக்கு பல்வேறு மலைக் கிராமங்கள் ஏற்காடு தொகுதியின் எல்லைக்குள் வருகின்றன.
ஏற்காடு தொகுதியில் உள்ள வாக்காளர்கள் விவரம்:
ஏற்காடு வட்டம்: ஆண்கள் 13,181, பெண்கள் 13,431, மொத்தம் - 26,612.
சேலம் வட்டம்: ஆண்கள் 23,470, பெண்கள் 23,728, இதரர் 4, மொத்தம் - 47,202.
ஆத்தூர் வட்டம்: ஆண்கள் 10,190, பெண்கள் 9,744, மொத்தம் - 19,934.
வாழப்பாடி வட்டம்: ஆண்கள் 70,117, பெண்கள் 70,868, இதரர் 1, மொத்தம் 1,40,986.
ஏற்காடு தொகுதியில் மொத்தம் 1,16,958 ஆண் வாக்காளர்களும், 1,17,771 பெண் வாக்காளர்களும், 5 இதரர் உள்ளிட்ட 2 லட்சத்து 34 ஆயிரத்து 734 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
290 வாக்குச் சாவடிகள்
ஏற்காடு தொகுதியில் ஏற்காடு வட்டத்தில் 41 வாக்குச்சாவடிகளும், சேலம் வட்டத்தில் 58 வாக்குச்சாவடிகளும் உள்ளன. வாழப்பாடியில் 167 வாக்குச் சாவடிகளும், ஆத்தூர் வட்டத்தில் 24 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 290 வாக்குச்சாவடிகள் சுமார் 120 மையங்களில் அமைக்கப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.