பெங்களூர் - நாகர்கோயில் விரைவு ரயில் ஓரிரு மாதங்களில் இயக்கப்படும்: தென்னக ரயில்வே பொதுமேலாளர் தகவல்

சேலம் - கரூர் அகல ரயில்பாதையில் அவர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இதன் ஒருபகுதியாக, நாமக்கல் ரயில்நிலையத்துக்கு வந்த அவர், அங்கு அலுவலக அறை, பயணிகள் தங்கும் அறை, வாகன
Updated on
1 min read

மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெங்களூரு - நாகர்கோயில் விரைவு ரயில் ஓரிரு மாதங்களில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ்மிஸ்ரா தெரிவித்தார்.

சேலம் - கரூர் அகல ரயில்பாதையில் அவர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இதன் ஒருபகுதியாக, நாமக்கல் ரயில்நிலையத்துக்கு வந்த அவர், அங்கு அலுவலக அறை, பயணிகள் தங்கும் அறை, வாகன நிறுத்தகம் அமைக்கப்படும் இடம் போன்றவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சேலம் - கரூர் அகல ரயில்பாதைக்கு இடைப்பட்ட பகுதிகளில் சேவைச்சாலைகள் அமைப்பதற்கு தேவையான நிலங்கள் தற்போதுதான் மாநில வருவாய்த்துறையிடம் இருந்து ரயில்வே துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. விரைவில் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு இணைப்புச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.

அதேபோல், ரயில்நிலையங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கும் விரைவில் ஒப்பந்தப்பள்ளி அளிக்கப்பட்டு வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்படும். மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்ட பெங்களூர் - நாகர்கோயில் விரைவு ரயில் இயக்கும் முடிவு தென்மேற்கு ரயில்வே துறை வசம் உள்ளது. எனினும், பொது மக்களின் நலன்கருதி அந்த ரயில் ஓரிரு மாதங்களில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

பின்னர், சிறப்பாக பணியாற்றிய நாமக்கல் ரயில்நிலைய அலுவலர் குயிலனுக்கு பண முடிப்பையும் ராகேஷ்மிஸ்ரா வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து மோகனூர் ரயில்நிலையத்திலும் ஆய்வு முடித்துவிட்டு கரூர் சென்றனர். இந்த ஆய்வின்போது சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சுஜாதா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.முன்னதாக, ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ்மிஸ்ராவிடம் மத்திய முன்னாள் இணை அமைச்சரும், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.காந்திசெல்வன் இணைப்புச் சாலைகள் ஏற்படுத்திடவும், ரயில் நிலையத்துக்கு பொதுமக்கள் வந்து செல்ல பேருந்து வசதி ஏற்படுத்திடவும் வலியுறுத்தினர்.

அதற்கு ரயில்நிலையங்கள் அருகே இணைப்புச் சாலைகள் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ள ரூ.1 கோடி நிதியில் இன்னும் 3 மாதங்களில் சாலைகள் அமைக்கப்படும். ரயில்நிலையத்துக்கு வந்து செல்ல பேருந்து வசதிகள் ஏற்படுத்திடவும் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்துக்கு பரிந்துரைக்கப்படும் என்று ராகேஷ்மிஸ்ரா தெரிவித்ததாக காந்திசெல்வன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com