பட்டாசு ஆலைகளின் செயல்பாடுகள் குறித்து தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனர்.
விருதுநகர் மாவட்ட பகுதிகளில் தீபாவளி நெருங்கி வருவதால் பட்டாசு தயார் செய்யும் தொழிலில் ஆலைகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பட்டாசுகளை உற்பத்தியை பெருக்கும் வகையில் அதிகமான ஆள்களை ஈடுபடுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. இதுபோன்றவைகளை தடுக்கும் வகையிலும், விபத்துக்களை குறைக்கும் வகையில் விதிமுறைப்படி செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகர், சிவகாசி ஆகிய பகுதிகளில் தலா 2 குழுக்கள் கடந்த 1-ம் தேதியிலிருந்து தீபாவளி முன்தினம் வரையில் தீவிரமாக ஆய்வு செய்யவுள்ளனர்.
விருதுநகர் பகுதியில் உள்ள கன்னிசேரி பகுதியில் திண்டுக்கல் தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையின் இணை இயக்குநர் காளியண்ணன் தலைமையில் இக்குழுவினர் ஆய்வு செய்தனர். அங்கு தொழிற்சாலை விதிமுறைப்படி பட்டாசு ஆலைகள் இயங்குகிறதா, உரிமத்தில் குறிப்பிட்டுள்ள அறைகளுடன் இயங்குகிறதா, ஆள்களை அதிகமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுத்துகிறார்களா, இதுபோன்ற ஆலைகளில் 55 வயசுக்கு மேற்பட்டவர்கள் மருந்துக் கலவை உள்ளிட்ட இடங்களில் பணி செய்கிறார்களா, அலுமினியம் பவுடர், நைட்ரேட் உள்ளிட்ட வேதி மருந்துகள் அதிகளவில் இருப்பு வைக்கப்படுகிறதா என்பது குறித்து வைப்பறையை ஆய்வு செய்தனர்.இந்த ஆலைகளில் தயார் செய்யும் பட்டாசுகளில் வேதி பொருள்கள், கரிமருந்துகள் சம அளவில் பயன்படுத்தப்படுகிறதா, சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் அதிக அளவு வெடி மருந்துக் கலவை கலக்கப்படுகிறதா என்பது குறித்து தீவிரமாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், இதேபோல், வச்சக்காரப்பட்டி, துளுக்கப்பட்டி, தம்மநாயக்கன்பட்டி, சின்னவாடி, சின்னராமலிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆலைகளில் ஆய்வு செய்தனர்.
கலக்கத்தில் உரிமையாளர்கள்: இதுபோன்று பட்டாசு ஆலைகளுக்கு முன் கூட்டியே எவ்வித தகவலும் தெரிவிக்காமல் திடீரென ஆய்வுக்கு வருகின்றனர். ஏற்கனவே வருவாய்த்துறை தலைமையில் பல்வேறு துறைகள் அடங்கிய குழுக்களும் ஒவ்வொரு ஆலையையும் ஆய்வு செய்துள்ளனர். இதையடுத்து, தற்போது தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை அலுவலர்கள் ஆய்வு செய்கிறார்கள் இதுபோன்று செய்வதால் ஆலையில் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்படும் சூழ்நிலையேற்படுவதாக பட்டாசு மேற்பார்வையாளர் ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.