விருதுநகர் பகுதியில் இரண்டு நாள்களாக பெய்த பரவலான மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

இம்மாவட்டத்தில் மொத்தம் 1.50 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் உள்ளது. இதில், தற்போது 1.20 ஆயிரம் ஹெக்டேரில் கிணற்றுப் பாசனம் மற்றும் மானாவாரி விவசாயமும் நடைபெற்று வருகிறது. கடந்த
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் மழையால் கருகும் நிலையிலிருந்த பயிர்கள் பசுமையாக மாறி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இம்மாவட்டத்தில் மொத்தம் 1.50 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் உள்ளது. இதில், தற்போது 1.20 ஆயிரம் ஹெக்டேரில் கிணற்றுப் பாசனம் மற்றும் மானாவாரி விவசாயமும் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் பெய்த மழையை அடுத்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அனைவரும் தானிய விதைப்பு பணிகளை ஆர்வத்துடன் மேற்கொண்டனர்.அதிலும், விருதுநகர் வட்டார பகுதிகளான ஆமத்தூர், செவல்பட்டி, விருதுநகர் பகுதியில் வடமலைக்குறிச்சி, சின்னமூப்பன்பட்டி, வெள்ளூர், குமாரபுரம்,  இனாம்ரெட்டிபட்டி, மருளூத்து, வாய்ப்பூட்டான்பட்டி, வி.முத்துலிங்காபுரம், ஒண்டிப்புலிநாயக்கனூர், வடமலாபுரம், செங்குன்றாபுரம், புதுக்கோட்டை, சங்கரலிங்காபுரம், முத்துலாபுரம், சீனியாபுரம், எரிச்சநத்தம், எல்கைபட்டி, குந்தலப்பட்டி, எலிங்கநாயக்கன்பட்டி மற்றும் செங்ககோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கம்பு, இரும்புச்சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, பாசிப்பயறு, மொச்சை, குதிரைவாலி மற்றும் தட்டைப்பயறு உள்ளிட்ட பல்வேறு தானியப்பயிர்களை விளைநிலங்களில் விதைத்தனர்.

எனவே விதைத்த நாளில் இருந்து 35 நாள்களுக்கும் மேலாக போதிய மழையில்லாத நிலையில், கடும் வெய்யிலடித்ததால் பயிர்கள் அனைத்தும் கருகி வந்தது. இன்னும் ஒரு வாரத்திற்கு தாங்கும் நிலையில் இருந்து பயிர்களை பார்த்து விவசாயிகள் கவலையடைந்தனர். இதையடுத்து, கடந்த இரண்டு நாள்களாக பகலில் கடும் வெய்யிலடித்த நிலையில் இரவில் பெய்யத் தொடங்கிய பரவலான மழையால், விளைநிலத்தில் பயிர்கள் கருகும் நிலையிலிருந்து மாறி பசுமையாக இருக்கிறது. இதனால், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயமுருகன் கூறுகையில், விதைத்த நாள்களில் இருந்து போதிய மழையில்லாத நிலையிருந்தது. இதையடுத்து கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் காட்டு மழை பரவலாக பெய்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் ஓடைகளிலும் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.தற்போது பெய்துள்ள மழை நீடித்தால் தானியப் பயிர்கள் அனைத்தும் சிறப்பாக வளர்ச்சி அடையும். ஏற்கனவே பயறு வகைகளில் முதல் தடவை மகசூல் எடுத்திருக்க வேண்டும். ஆனால், மழை தாமதமாக பெய்ததால் எடுக்கு முடியாத சூழ்நிலையிருப்பதால் விவசாயிகளுக்கு மகசூல் பாதிக்கும் நிலையிருக்கிறது. இதுபோன்று தொடர்ந்து மழை பெய்தால் கண்மாய்களில் நீர் வரத்து ஏற்படும். அதைத் தொடர்ந்து கிணறுகளுக்கும் நீர் வரத்து ஏற்படும் என்றார் விஜயமுருகன்.        

மழை அளவு: இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் பதிவான மழை அளவு விவரம் வருமாறு: சாத்தூர்-25 மி.மீ, சிவகாசி-24.05 மி.மீ, வெம்பக்கோட்டை-18 மி.மீ, கோவிலாறு-17.08 மி.மீ,  திருச்சுழி-11.05, ஸ்ரீவில்லிபுத்தூர்-11 மி.மீ, அருப்புக்கோட்டை-11 மி.மீ, விருதுநகர்-10 மி.மீ, ராஜபாளையம்-5 மி.மீ, வத்திராயிருப்பு-3 மி.மீ என்ற அளவில் மழை பரவலாக பெய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com