காலிங்காரயன் கால்வாயில் குதித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை

காலிங்கராயன் கால்வாயில் குதித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக மொடக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Updated on
1 min read

காலிங்கராயன் கால்வாயில் குதித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக மொடக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு வாய்க்கால்மேடு ஈபி நகரை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகன் பாலசுப்பிரமணியம் (45). இவர், சென்னிமலை சாலையில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையில் உதவிப் பொறியாளராக பணியாற்றி வந்தார்.இவருக்கும், நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியை ராமசாமி மகள் சண்முகவடிவு (36) என்பவருக்கும் 1995-ம் ஆண்டு திருமணம் நடந்தது. மூன்றரை வயதில் வருண் என்ற ஆண் குழந்தை இருந்தது. திருமணம் முடிந்து 14 ஆண்டுகளுக்கு பின் வருண் பிறந்தான். இதனால், வருண் மீது இத்தம்பதியினருக்கு பாசம் அளவுக்கு அதிமாக இருந்தது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக வருணுக்கு உடல் நலம் சரியில்லையாம். ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வருணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.வருணுக்கு மூளைக்காய்ச்சல் இருப்பதாக கூறிய மருத்துவர்கள் திங்கள்கிழமை காலையில் சில மணி நேரத்துக்குள் இறந்துவிடுவான் என கூறினார்களாம். இதனால் மனம் உடைந்த பாலசுப்பிரமணியம், சண்முகவடிவு ஆகியோர் வருணை அழைத்துக்கொண்டு மருத்துவமனையில் இருந்து திங்கள்கிழமை காலை 8 மணி அளவில் வெளியேறிவிட்டனர்.அவர்கள் தங்கியிருந்த அறையில், சண்முகவடிவின் தந்தை ராமசாமி மட்டும் இருந்தார். நீண்டநேரமாகியும் அவர்கள் அறைக்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த ராமசாமி, பாலசுப்பிரமணியத்தின் செல்போனுக்கு தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து புஞ்செய்புளியம்பட்டியில் உள்ள தனது உறவினர்களுக்கு ராமசாமி தகவல் கொடுத்தார்.

அவர்களும் ஈரோட்டுக்கு வந்து பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து ஈரோடு நகர காவல் நிலையத்தில் ராமசாமி புகார் கொடுத்தார். பாலசுப்பிரமணியத்தின் செல்போன் இருப்பிடம் குறித்து செல்போன் நிறுவனத்தின் மூலமாக போலீஸார் விசாரணை செய்தபோது சோலார் பகுதி வரை செல்போன் கோபுரத்துடன் அவரது செல்போன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அப்பகுதிக்கு போலீஸார் சென்றபோது சோலார் அருகே வெண்டிப்பாளையம் நீர்மின்தேக்க பகுதிக்கு அருகே உள்ள காலிங்காரயன் கால்வாய் ஓரத்தில் பாலசுப்பிரமணியத்தின் பைக் நின்றுகொண்டிருந்தது. அவர்கள் மூவரும் கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்தனர்.

தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து கால்வாயில் தேடினர். கால்வாயில் வினாடிக்கு 2,000 கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் அவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்றும், சடலங்களையும் உடனடியாக மீட்க வாய்ப்பு இல்லை என்றும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.இச்சம்பவம் தொடர்பாக மொடக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com