தனியார் பேருந்து பைக் மீது மோதியதில் 2 பேர் பலி

எருமப்பட்டி அருகே தனியார் பேருந்து மோதி மொபட்டில் வந்து கொண்டிருந்த டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் டெய்லர் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து ஏற்படுத்திய
Updated on
1 min read

எருமப்பட்டி அருகே தனியார் பேருந்து மோதி மொபட்டில் வந்து கொண்டிருந்த டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் டெய்லர் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்து அருகில் இருந்த வாய்க்காலில் இறங்கி நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எருமப்பட்டி அருகே மாணிக்கவேலூரைச் சேர்ந்தவர் ராமசாமி(39) டெய்லர். இவருக்கு மணிமேகலை(30) என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ராமசாமியின் உறவினர் கணேசன்(39) டாஸ்மாக் விற்பனையாளர். இவருக்கு ஜோதிமணி(30) என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர்.ராமசாமி, கணேசன் ஆகிய இருவரும் அதே ஊரில் தொகுப்பு வீடுகள் கட்டி வருகின்றனர். இதற்காக கட்டுமான பொருட்கள் வாங்கிவர இருவரும் நாமக்கல் நோக்கி சனிக்கிழமை மதியம் மொபட்டில் வந்து கொண்டிருந்தனர். எருமப்பட்டி தனியார் கல்லூரி அருகே வந்தபோது எதிரே நாமக்கல்லிருந்து துறையூர் நோக்கி வேகமாக சென்ற தனியார் பேருந்து ஒன்று இவர்கள் வந்த மொபட் மீது பலமாக மோதியதாகத் தெரிகிறது. இதில், உடல் நசுங்கி ராமசாமி, கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இருவர் மீது மோதிய பேருந்து தொடர்ந்து சாலையோரம் இருந்த பெட்டிக்கடையை உடைத்துக் கொண்டு அருகே இருந்த வாய்க்காலில் இறங்கி நின்றது. உடனடியாக பேருந்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தகவலறிந்த எருமப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று ராமசாமி, கணேசன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

தொடர்ந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com