புதிய அகலரயில் பாதையில் விருதுநகர்-மானாமதுரை-காரைக்குடி பயணிகள் ரயில் துவக்கம்

புதிய அகலரயில் பாதையில் விருதுநகர்-மானாமதுரை வழியாக காரைக்குடிக்கு பயணிகள் ரயில் போக்குவரத்தை மக்களவை உறுப்பினர் மாணிக்கம்தாகூர் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
புதிய அகலரயில் பாதையில் விருதுநகர்-மானாமதுரை-காரைக்குடி பயணிகள் ரயில் துவக்கம்
Updated on
1 min read

புதிய அகலரயில் பாதையில் விருதுநகர்-மானாமதுரை வழியாக காரைக்குடிக்கு பயணிகள் ரயில் போக்குவரத்தை மக்களவை உறுப்பினர் மாணிக்கம்தாகூர் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

விருதுநகர்-மானாமதுரை வரையில் புதிதாக அமைக்கப்பட்ட அகல ரயில்ப்பாதையில் ரயில் போக்குவரத்து இயக்கமும் தொடங்கி உள்ளது. இப்பாதையில் ரயில் என்ஜின் ஓட்டத்தை கடந்த மாதம் எம்.பி. தொடங்கி வைத்தார். அதையடுத்து, புதுச்சேரி-மானாமதுரை-அருப்புக்கோட்டை வழியாக கன்னியாகுமரிக்கு வாரந்திர பயணிகள் விரைவு ரயில் மட்டும் இயங்கி வருகிறது.இந்நிலையில் காரைக்குடியில் இருந்து மானாமதுரைக்கு இயக்கப்பட்டு வந்த ரயிலை விருதுநகர் ரயில் நிலையம் வரை நீட்டிப்பு செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோர் கோரிக்கை விடுத்து வந்தனர். அக்கோரிக்கையை ஏற்ற தென்னக ரயில்வே இப்பாதையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய ரயில் சேவையை தொடங்கியுள்ளது.

அதன் அடிப்படையில் விருதுநகர் ரயில் நிலையத்தில் நடந்த புதிய பயணிகள் ரயிலின் தொடக்க விழாவிற்கு ரயில்வே கோட்ட மேலாளர் ரஸ்தோகி தலைமை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டு புதிய பயணிகள் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதையடுத்து, விரைவில் விருதுநகர்-மானாமதுரை வழித்தடத்தில் சென்னை செல்லும் ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த ரயில் நாள்தோறும் விருதுநகர் ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மானாமதுரைக்கு 7.40 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து 7.50 மணிக்கு புறப்பட்டு 9.35-க்கு காரைக்குடியை வந்தடையும். அதேபோல், காரைக்குடியிலிருந்து நாள்தோறும் மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு மானாமதுரைக்கு வரும், இங்கிருந்து 7.45-க்கு புறப்பட்டு 9.45-க்கு விருதுநகர் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும். அதேபோல், சனிக்கிழமை காரைக்குடியிலிருந்தும், ஞாயிற்றுக்கிழமை விருதுநகரிலிருந்தும் இந்த ரயில் இயக்கப்படமாட்டாது என தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ரயில்வே கோட்ட மேலாளர் ரஸ்தோகி கூறியதாவது: தற்போது, பயணிகள் ரயில் 75 கி.மீ வேகத்திலேயே இயக்கப்பட இருக்கிறது. குறிப்பிட்ட நாள்களுக்கு பின்னர் 100 கி.மீ வேகத்தில் இயக்கப்படும். அப்போது, ரயில் புறப்படும் நேரத்தை மாற்றி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

   இந்நிகழ்ச்சியில் கூடுதல் கோட்ட மேலாளர் அஜித்குமார், முதுநிலை வர்த்தக மேலாளர் கோவிந்தராஜ், ரயில்வே பாதுகாப்பு கோட்ட ஆணையாளர்கள் ராமலிங்கம், ரயில்வே முதுநிலை மக்கள் தொடர்பு அலுவலர் வேணுகோபால் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com