விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உரமூட்டைகளில் குறிப்பிட்டுள்ள விலையைவிட கூடுதலாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.சுப்பையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
இம்மாவட்டத்தில் ராபி பருவத்தில் நெல்-31 ஆயிரம் ஹெக்டேர், சிறுதானிய பயிர்கள் 43 ஆயிரம் ஹெக்டேர், பயறு வகைகள் 18330 ஹெக்டேர், எண்ணெய் வித்து பயிர்களில் 7820 ஹெக்டேர், பருத்தி 10500 ஹெக்டேர், கரும்பு 4 ஆயிரம் ஹெக்டேரிலும் பயிர் சாகுபடி செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.எனவே இப்பயிர்களுக்கு தேவைப்படும் உரங்களான 10368 மெட்ரிக் டன் யூரியா, 14599 மெட்ரிக் டன் டி.ஏ.பி, 9430 மெட்ரிக் டன் பொட்டாஷ், 12403 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவைப்படுகிறது. இப்பயிர்களுக்கு தேவையான உரங்கள் அனைத்தும் அந்தந்த பகுதி கூட்டுறவு வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில் உரங்கள் விநியோகம் செய்வதை வேளாண்மை துறை மூலம் கண்காணிக்க வேளாண்மை இணை இயக்குநர் தலைமையில் உரக்கண்காணிப்பு தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரிவு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் செயல்படும். இது தொடர்பான தகவல்களை 04562-252705 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு உரம் குறித்த விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம். இப்புகார் அனைத்தும் பதிவு செய்தவுடன் உடனுக்கு உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார வேளாண்மை அதிகாரியிடமும் புகார் செய்யலாம்.
உரம் விற்பனையாளர்கள் மூடைகளில் குறிப்பிட்ட விலைப்படியே பில் போட்டு விற்பனை செய்ய வேண்டும். அதேபோல், விற்பனை பட்டியலில் விவசாயிகளின் முகவரியுடன் விவரங்களை பதிவு செய்வது அவசியம் ஆகும். கடைகளுக்கு முன்பு விலைப்பட்டியல் பலகைகளையும் வைக்க வேண்டும். இம்மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட உரங்களை வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. இதுபோன்ற விதிமுறை மீறும் விற்பனையாளர்கள் மீது உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், காலவதியான பூச்சி மருந்துகளை எக்காரணம் கொண்டும் விவசாயிகளுக்கு விற்கக்கூடாது. மேலும், அரசு அங்கிகாரம் பெற்ற பூச்சி மருந்துகளை மட்டும் விநியோகம் செய்ய வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.சுப்பையா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.