விருதுநகர்: இரவு நேரத்தில் இயங்கிய பட்டாசு ஆலை உரிமையாளர் கைது

விருதுநகர் அருகே அரசு விதிமுறைகளை மீறி இரவு நேரத்தில் இயங்கியது தொடர்பாக அதன் உரிமையாளரை வச்சக்காரப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே அரசு விதிமுறைகளை மீறி இரவு நேரத்தில் இயங்கியது தொடர்பாக அதன் உரிமையாளரை வச்சக்காரப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே சின்னராமலிங்காபுரம் கிராமத்தில் இரவு நேரத்தில் விதிமுறையை மீறி தனியார் பட்டாசு ஆலையின் தொழிலாளர்கள் பணி செய்து வருவதாக வட்டாட்சியர் மங்களநாதனுக்கு ரகசிய தகவல் வந்தது. தீபாவளி நெருங்கி வருவதால், தற்போது விருதுநகர் வட்டார பகுதிகளில் பட்டாசுகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அதேநேரத்தில் அரசு விதிமுறையை பின்பற்றாத நிலையில் சட்டவிரோதமாகவும் இரவு நேரங்களில் பட்டாசு தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில் சின்னவாடி கிராம நிர்வாக அலுவலர் பவுன்ராஜ் மற்றும் வச்சக்காரப்பட்டி போலீஸார் ஆகியோர் இரவு நேரத்தி்ல் முதலிபட்டி, வி.முத்துராமலிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது, சின்னராமலிங்காபுரம் கரிசல் காட்டு பகுதியில் தனியார் பட்டாசு ஆலைக்கு வெளியே கூரையின் கீழ் குழல் விளக்கின் வெளிச்சத்தில் தரைச்சக்கரம் மற்றும் சீனிவெடி சரம் பின்னும் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, தூரத்தில் இருந்து பார்த்த தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் தப்பியோடினார்கள். பின்னர் சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்த போது சீனி வெடி மற்றும் தரைச்சக்கரம் தயார் செய்தல் பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. உடனே இது தொடர்பாக ஆலை அறையில் இருந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

டி.ஆர்.ஓ எச்சரிக்கை: விருதுநகர் மாவட்ட வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் தனியார் பட்டாசு ஆலைகளில் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தினால் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி தெரிவித்தார். அதேநேரம், விதிமுறை மீறி இரவு நேரத்தில் மின்சார குழல் விளக்கு வசதியுடன் பட்டாசுகள் தயார் செய்து வருவதாக புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு ஆய்வு செய்த போது சின்னவாடி அருகே வேல்முருகன் பயர் ஒர்க்ஸில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தது ஆய்வில் தெரியவந்ததால் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்பகுதியில் விதிமுறை மீறியதாக தங்கப்பாண்டியன் பயர் ஒர்க்ஸ் ஆலை மீது சீல் வைத்து கடந்த மாதம் நடவடிக்கை எடுக்கப்பட்டுடிருந்தது. இந்நிலையில் அங்கும் இரவில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதுபோல் விதிமுறை மீறியும், சீல் வைத்த ஆலைகளில் இரவு நேரங்களில் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவது தெரியவந்தால் நிரந்தரமாக ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி எச்சரிக்கை விடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com