ரூ. 50 லட்சம் மோசடி செய்த பைசூலை கைது செய்யக் கோரி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா புதன்கிழமை மனு அளித்தார்.
சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ராதா. இவர் கடந்த 22-ம் தேதி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தொழிலதிபர் பைசூல் என்ற ஷியாம் தன்னுடன் 6 ஆண்டுகள் குடும்பம் நடத்தி விட்டு, இப்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும், மேலும் தன்னிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகார் மனு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையர் ஜார்ஜ், வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸாருக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்தனர்.இதற்கிடையே பைசூல், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த 4-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் நடிகை ராதா கொடுத்தப் புகாரின் கீழ் பைசூல் மீது ஏமாற்றியது, மோசடி செய்தது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் பைசூலை உடனடியாக கைது செய்யக் கோரி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா புதன்கிழமை மீண்டும் மனு கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது,
பைசூலின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை இன்னும் அவரை கைது செய்யாமல் இருந்து வருகிறது. இதனால் நான் மன உளைச்சல் அடைத்துள்ளேன். அதேவேளையில் எனக்கு முதல் தகவல் அறிக்கையின் நகல் கூட போலீஸார் மறுக்கின்றனர். போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் தொடர்புடைய பைசூலை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளேன் என்றார் ராதா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.