மணிக்கொடி எழுத்தாளர் சுவாமிநாத ஆத்ரேயன் காலமானார்

தஞ்சாவூர் மேல வீதியைச் சேர்ந்த மணிக்கொடி காலத்து பிரபல எழுத்தாளர் வி. சுவாமிநாத ஆத்ரேயர் வியாழக்கிழமை (டிச.19) அவரது இல்லத்தில் உடல் நலக்குறைவால்
மணிக்கொடி எழுத்தாளர் சுவாமிநாத ஆத்ரேயன் காலமானார்

தஞ்சாவூர் மேல வீதியைச் சேர்ந்த மணிக்கொடி காலத்து பிரபல எழுத்தாளர் வி. சுவாமிநாத ஆத்ரேயர் வியாழக்கிழமை (டிச.19) அவரது இல்லத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 94.

   கடந்த 1919 ஆம் ஆண்டு நவ. 19-ம் தேதி பிறந்த இவர் தனது தந்தை சிமிழி வெங்கடராம சாஸ்திரியிடம் சகல சாஸ்திரங்கள், ராமாயண பாகவதாதி இதிகாச புராணங்களைக் கற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருத வ்யாகரண சிரோமணி பயின்றார்.

   சம்ஸ்கிருதத்தில் புலமைப் பெற்ற இவர் ஆங்கிலப் பேராசிரியர் சில்வர் டங்க் சீனிவாச சாஸ்திரியின் வகுப்பில் கலந்து கொண்டு அவர் கூறும் சொற்றொடர்களுக்கு சம்ஸ்கிருதத்தில் எடுத்துரைத்து, அவரது நன் மதிப்பைப் பெற்றவர். இவர் சென்னை குப்புசுவாமி ஆய்வு நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றினார்.

   காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வானாகிய சுவாமிநாத ஆத்ரேயர் இசையிலும் புலமைப் பெற்றவர். குறிப்பாக, தியாகராஜ கீர்த்தனை நுணுக்கங்களை நன்கறிந்தவர்.  மணிக்கொடி காலத்து எழுத்தாளரான சுவாமிநாத ஆத்ரேயர் மாணிக்க வீணை போன்ற படைப்புகளுக்குச் சொந்தக்காரர். அவரது படைப்புகளில் பகவத்கீதை தமிழ் மொழிபெயர்ப்பு, துளசி ராமாயணம் தமிழ் மொழியாக்கம், பக்த சாம்ராஜ்யம், நாம சாம்ராஜ்யம், ஸ்ரீராமமாதுரீ, ராமநாமம், தியாகராஜ அனுபவங்கள், ஆத்ரேய லகு லேக மாலா, ஜய ஜய ஹனுமான், சிவ லீலார்ணவம் தமிழாக்கம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

   காஞ்சி மஹா பெரியவரின் அன்புக்குரிய சீடரான சுவாமிநாத ஆத்ரேயர் மஹா பெரியவரின் விருப்பப்படி சமர்த்த ராமதாஸ் சரிதம் என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலில் சிவாஜி மராட்டிய சாம்ராஜ்யத்தை அமைப்பதற்கு சமர்த்த ராமதாசரின் பெரும் பங்கை மிக அழகாக விளக்கியுள்ளார்.

   அவர் எழுதிய தியாகராஜ அனுபவங்கள் என்ற நூலில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் உளப்பாங்கு, கீர்த்தனைகள் உருவான விதம் குறித்து மிக அழகாக வர்ணித்துள்ளார். அவரது சம்ஸ்கிருத நூல்களையும், தொண்டையும் பாராட்டி அவருக்கு முன்னாள் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி ராஷ்ட்ரிய சம்ஸ்கிருத சம்ஸ்தான மூலம் என்ற விருதை வழங்கி கௌரவித்தார்.


   மேலும், இவருக்கு 1963 ஆம் ஆண்டில் காஞ்சி பெரியவர் ஆசுகவி திலகம் என்ற விருதையும், மடத்தின் ஆஸ்தான வித்வான் என்ற விருதையும் வழங்கினார். தவிர, இவருக்கு 2010 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அறக்கட்டளை ஞானச்செம்மல் என்ற விருதையும், உலக வேத அமைப்பு வேதஸ்ரீ என்ற விருதையும் வழங்கி கௌரவித்தன.


   இவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. தொடர்புக்கு ஆர். சுந்தரராமன் - 90037 71433.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com