போச்சம்பள்ளி அருகே பெண் கொலை
By ராதாகிருஷ்ணன் | Published On : 14th June 2013 11:30 PM | Last Updated : 14th June 2013 11:30 PM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
மத்தூர் அருகே உள்ள சாம்பல்பட்டியைச் சேர்ந்தவர் தையலர் முகமது சலீம் (35). இவரது மனைவி பரிதாபீ (33). இவர்களுக்கு அஸ்லாம் (15), முகமது (12) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
கணவரை பிரிந்து வாழும் பரிதாபீ மத்தூரில் குழந்தைகளுடன் தங்கியிருந்து கூலி வேலைக்கு செய்து வருகிறார்.
தர்மபுரியைச் சேர்ந்த சுதர்சனம் (32). சொந்தமாக கார் வைத்து ஓட்டி வரும் இவருக்கும், பரிதாபீக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த இரு ஆண்டாக இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன் போச்சம்பள்ளி அருகே உள்ள வடம்மலம்பட்டிக்கு இவர்கள் குடிவந்தனர். இதில் வியாழக்கிழமை இரவு சுதர்சனம், பரிதாபீயின் வீட்டிற்கு வந்துள்ளார். நள்ளிரவில் பரிதாபீக்கும், சுதர்சனத்திற்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில், சுதர்சனம் கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது அங்கிருந்து சுதர்சனம் தப்பியோடி விட்டாராம்.
இதுபற்றி தகவல் அறிந்த, பர்கூர் துணை காவல் கண்காணிப்பாளர் கஜேந்திரன், போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் முருகன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சுதர்சனத்தை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.