கோமாவில் இருந்து மீண்டார் ஜெஸ்ஸி ரைடர்
By dn | Published On : 30th March 2013 07:45 PM | Last Updated : 30th March 2013 07:45 PM | அ+அ அ- |

நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெஸ்ஸி ரைடர் கோமா நிலையில் இருந்து மீண்டுள்ளார்.
செயற்கை சுவாசக் கருவியின் (வென்டிலேட்டர்) உதவியின்றி சுவாசிக்கத் தொடங்கியுள்ளார். படுக்கையில் இருந்து எழுந்ததோடு, குடும்பத்தினருடன் மீண்டும் பேசியுள்ளார்.
கடந்த புதன்கிழமை இரவு நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான ரைடர், கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையின் காரணமாக அவருடைய உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவருடைய மேலாளர் ஆரோன் க்ளே கூறுகையில், "ஜெஸ்ஸியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கோமாவில் இருந்து மீண்டுள்ள அவருக்கு தற்போது சுவாசப் பிரச்னையும் சீராகிவிட்டது. அவர் படுக்கையில் இருந்து எழுந்து எங்களிடம் பேசினார்.
அவருடைய உடல் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பார்க்கும்போது மிகவும் "த்ரில்'லாக உள்ளது. இது காயத்திலிருந்து ஜெஸ்ஸி குணமடைவதற்கான தொடக்கம் மட்டுமே. அவர் முழுமையாகக் குணமடைய இன்னும் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. ஜெஸ்ஸிக்கு தான் தாக்கப்பட்டது தொடர்பான விஷயங்கள் எதுவும் நினைவில் இல்லை. அவர் தாக்கப்படுவதற்கு முன்பு வெலிங்டன் அணிக்காக விளையாடிய போட்டியில் டக் அவுட் ஆனது மட்டுமே அவருக்கு நினைவிருக்கிறது. அதன்பிறகு நடந்த எதுவும் அவருக்கு நினைவில் இல்லை. எனினும் தற்போது அவர் எங்கிருக்கிறார். என்ன நடந்தது, யாருடன் இப்போது பேசிக்கொண்டிருக்கிறார் என்பது தொடர்பான விஷயங்கள் அவருக்குத் தெரிகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அவர் விரைவாக குணமடைந்திருக்கிறார்.
அவருடைய நுரையீரலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். எனினும் அவரால் இயற்கையாக சுவாசிக்க முடிகிறது என்பது மிகப்பெரிய விஷயம்' என்றார்.