சென்னை தண்டையார்பேட்டையில் அரசு பஸ் டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தண்டையார்பேட்டை கைலா முதலித் தெரு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் செந்தில் (28). இவர் அரசு பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் பக்கத்து வசிப்பவர் கிருஷ்ணன். கிருஷ்ணனின் குழந்தை ஞாயிற்றுக்கிழமை முன் விளையாடிக் கொண்டிருந்ததாம். அப்போது அங்கு வந்த ஒரு மோட்டார் சைக்கிள் செந்தில் மீது மோதியதாம்.இதைப் பார்த்த அந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களே, அந்த குழந்தையை தனியார் மருத்துமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் செந்திலும், அவர் நண்பர் அதேப் பகுதியைச் சேர்ந்த அந்தோனியும் பணம் கேட்டு மோட்டார் வந்த இளைஞர்களிடம் தகராறு செய்தனராம். இதைப் பார்த்த செந்தில் இரு தரப்பையும் சமாதானம் செய்ய முயன்றதாக தெரிகிறது. மேலும் குழந்தைக்கு மருத்துவமனையில் மோதியவர்களே சிகிச்சை அளித்துவிட்டதால், பணம் கொடுக்க வேண்டியதில்லை என செந்தில் கூறினாராம்.
இதைக் கேட்ட கிருஷ்ணனும், அந்தோனியும் செந்திலிடம் தகராறு செய்தனராம். இதில் இருதரப்புக்கும் இடையே அடிதடி ஏற்பட்டதாம். இதையடுத்து கிருஷ்ணனும், அந்தோனியும் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் செந்தில் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.
இந்நிலையில் செந்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, ஒரு கும்பல் அவர் வீட்டுக் கதவை தட்டியது. பின்னர் அந்த கும்பல், தாங்கள் போலீஸார் எனவும், விசாரணைக்காக வந்திருப்பதாகவும் கூறி கதவை தட்டியதாம். இதைக் கேட்ட செந்தில், கதவை திறந்தார். இதை எதிர்பார்த்து காத்திருந்த அந்த கும்பல், செந்திலை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது.இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்டையார்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செந்தில் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்குத் தொடர்பாக கிருஷ்ணன் (35), அந்தோனி (40), அதேப் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (32), பாலு (31), சேணி (30) ஆகிய 5 பேரை போலீஸார் உடனடியாக கைது செய்தனர். செந்தில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.