இந்தியாவில் எந்த இடத்திலும் சிங்கள ராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது: கருணாநிதி கோரிக்கை
By dn | Published On : 28th May 2013 07:47 PM | Last Updated : 28th May 2013 07:47 PM | அ+அ அ- |

இந்தியாவில் எந்த இடத்திலும் சிங்கள ராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
இலங்கை ராணுவத்தினருக்கு சில குறிப்பிட்ட ராணுவப் பயிற்சிகள் மட்டுமே இந்தியாவில் அளிக்கப்பட்டு வருகிறது; ஆனால் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்குத் தமிழகத்தில் பயிற்சி அளிக்க மாட்டோம்” என்று நண்பர் ஏ.கே. அந்தோணி அவர்கள் தஞ்சையில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.மத்திய அரசின் சார்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட செய்திதான் இது. ஆனால், இலங்கைத் தமிழர்களைக் கொல்வதற்குக் காரணமாக இருக்கும் இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவிலே எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்கக் கூடாது என்பதுதான் தமிழகத்திலே உணர்வுள்ள தமிழர்களின் கோரிக்கை, வேண்டுகோள்.
இந்திய அரசிடம் நாம் பலமுறை அந்த வேண்டுகோளை விடுத்து விளக்கியுள்ளோம். “இந்தியாவிலே இலங்கை ராணுவத்திற்குப் பயிற்சி அளிக்கமாட்டோம்” என்று இந்திய அரசின் சார்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்க அவர்களால் இயலவில்லை.இலங்கையில் தமிழர் மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை' என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணியே ஒருமுறை கூறியிருக்கிறார். இந்தியாவில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்ட இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ், 'இந்தியாவில் இலங்கை ராணுவத்தினருக்கு அளிக்கப்படும் பயிற்சியை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எதிர்ப்பது பற்றிக் கவலையில்லை.அந்த அரசியல்வாதிகள் எழுப்பும் விவகாரங்கள் வெறுப்புணர்வால் ஏற்பட்டவை' என்று கூறினார். அப்போதே அதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் அந்தோணி, 'தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தெரிவித்த ஆட்சேபங்கள் வெறுப்புணர்வின் அடிப்படையில் எழுப்பப்பட்டவை என்று நான் கருதவில்லை.
இலங்கையில், அரசு சில நடவடிக்கைகளை எடுத்த போதிலும், இப்போதும் தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த அளவில் இல்லை. ஒருபுறம் தமிழகத்தின் உணர்வுகளையும் நாம் மதித்து நடந்துகொள்வோம். எனவே தமிழகப் பகுதிகளில் ராணுவப் பயிற்சி அளிக்காமல் தவிர்ப்போம்.அதே சமயம் மற்றப் பகுதிகளில் உள்ள ராணுவ அமைப்புகளில் இலங்கை வீரர்களுக்குப் பயிற்சி அளிப்போம்” என்று கூறினார். இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழர்களுக்கு எதிரான சிங்கள ராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது என்பது அனைத்துத் தமிழர்களின் வேண்டுகோள். இந்த உண்மையை நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் புரிந்து கொண்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டுமென்பதே மீண்டும் மீண்டும் நாம் விடுக்கின்ற கோரிக்கையாகும் என கூறியுள்ளார்.