கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்: முதல்வர்
By | Published On : 28th May 2013 03:57 PM | Last Updated : 28th May 2013 03:57 PM | அ+அ அ- |

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், உள்தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவியர் தங்களுக்கான உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
இது குறித்து இன்று (28.5.2013) தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர் ஆகியோருடன் விரிவாக விவாதித்தேன். இந்த விவாதத்தின் போது, ஆங்கில வழியில் பயிலும் மாணவ-மாணவியர் ஆங்கில மொழி திறனை வளர்த்துக் கொள்ள தங்களது உள் தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டு இருப்பதாகவும், தமிழ் வழியில் பயிலும் மாணவ-மாணவியருக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவு என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்படாமல் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
ஆங்கில மொழி வழியில் அல்லது தமிழ் மொழி வழியில் பயின்றாலும், மாணவ-மாணவியர் தமிழில் உள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்பது தான் எனது எண்ணம் ஆகும்.எனவே, ஆங்கில மொழி வழியில் பயிலும் மாணவ-மாணவியரும் தங்களது உள் தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத அனுமதிக்குமாறு நான் அரசு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதன் அடிப்படையில், தற்போது தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவை திரும்பப் பெற நான் ஆணையிட்டுள்ளேன்.எனவே, அனைத்து மாணவ-மாணவியரும் தங்களது உள் தேர்வுகளை அவரவர் விருப்பப்படி, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம் என கூறியுள்ளார்.