

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், தேர்தல் இதுவரை திருவிழா போல் நடத்தப்பட்டு வந்தது. ஆனால், இப்போது ஆணையத்தின் விதிமுறை காரணமாகவே, தேர்தல் தேர்தலாகவே நடக்கிறது. பணம் படைத்தவர்கள் மட்டுமல்லாமல், சமானியரும் தேர்தலை சந்திக்கும் வகையில் விதிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்க தேர்தல் ஆணையம் விரும்புகிறது. ஆனால் இந்த விருப்பம் பெயரளவுக்குத்தான் உள்ளது.
பொதுவாக இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சியின் ஆதிக்கத்தைப் பார்க்கும் போது விதிமுறைகள் ஒழுங்காக கடைப்பிடிக்கப் படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில், வேட்பாளர்களின் பெயர்களை தலைவர்கள் உச்சரித்தால், அது வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேரும் என்று, தேர்தல் ஆணையம் கூறுவது சரியல்ல. கட்சியின் கொள்கையைப் பிரசாரம் செய்வது, தேர்தல் செலவுக் கணக்கில் வராது என்பது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல். ஏற்கெனவே இவ்வாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆகவே, தேர்தல் ஆணையம் இவ்வாறு புது அறிவிப்பைக் கூறுவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால், பல இடங்களில் நான் வேட்பாளர் பெயரைக் கூற முடியாமல் போகிறது.
வேட்பாளரின் தோளைத் தட்டி இவர்தான் வேட்பாளர் என்று கூறி வருகிறேன். ஆனால், தோளைத் தட்டிச் சொல்வதற்கும், பெயரைச் சொல்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அதனால் பெயரைச் சொல்வதில் ஒன்றும் தவறில்லை என்று கூறினார் ஞானதேசிகன்.
பின்னர் செய்தியாளர்கள், தற்போது, காங்கிரஸ் தலைவர்கள் ஆளாளுக்கு சுற்றுப் பயணம் செய்து வருகிறார்கள். ப.சிதம்பரம் அவராகவே சுற்றுப் பயணம் செய்து வருகிறாரே என்று கேட்டனர்.
அதற்கு அவர், தலைவர்கள் சுற்றுப் பயணம் செய்வது, காங்கிரஸின் மீதான பற்றினால்தான். காங்கிரஸில் அனைவரும் உற்சாகத்துடன் இருக்கிறோம். ஆனால் பணபலம் இல்லை. அதனால் சற்று தொய்வு இருப்பதாகத் தெரிகிறது என்றார்.
தமிழக காங்கிரஸில் அதிமுக ஆதரவு திமுக ஆதரவு என்ற இருவேறு நிலைப்பாடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, இவ்வாறு கூறுவது தவறு, தொண்டர்கள் அனைவரும், தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும். விமர்சிக்கக் கூடாது. காங்கிரஸைப் பொருத்தவரை சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர்தான் மையமானவர்கள். ஏன்... திமுகவில் கூட காங்கிரஸில் சேர வேண்டும்; வேண்டாம் என்று இருவேறு கருத்துகள் இருந்தனவே.. என்றார்.
மதுரைக்கு வரும்போது அழகிரியை சந்திப்பதாகக் கூறினீர்களே... என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ஆமாம், மதுரைக்குச் செல்லும் போது, நான் அழகிரியைச் சந்திப்பேன் என்றூ ஏற்கெனவே கூறியிருந்தேன்... ஆனால் இப்போது அழகிரி என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிந்தும், எனக்கு நேரமில்லை என்பதாலும் நான் அவரைச் சந்திக்கவில்லை. ஆனால், அடுத்த முறை வரும்போது அதுகுறித்து பரிசீலிப்பேன்.. என்றார்.
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மான விவகாரத்தில் இந்தியா கலந்துகொள்ளாதது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், நாட்டின் இறையாண்மையைக் காக்க அமெரிக்காவின் எண்ணத்தை தடுக்கும் வகையில்தான் ஐ.நா. தீர்மானத்தை புறக்கணித்தோம். இந்தியாவின் இறையாண்மைக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார்.
ரஜினியை காங்கிரஸுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வருமாறு தங்கபாலு அழைப்பு விடுத்திருந்தாரே என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், கமல் ரஜினி யாராக இருந்தாலும் காங்கிரஸுக்கு பிரசாரம் செய்ய வந்தால் வரவேற்போம் என்றார் ஞானதேசிகன்.
பின்னர், சோனியா காந்தி நாகர்கோயிலிலும், ராகுல் காந்தி தென் மாவட்டங்களில் ஏதேனும் ஓர் இடத்தில் பிரசாரம் செய்ய வரலாம் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.