வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அரசியல் கட்சியினர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: தேர்தல் ஆணையம்

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யும் அரசியல் கட்சியினர் மீது பாரபட்சமில்லாமல் காவல் துறையின் மூலம்  நடவடிக்கை எடுக்கவும், சோதனைச் சாவடிகளில் எந்நேரமும்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யும் அரசியல் கட்சியினர் மீது பாரபட்சமில்லாமல் காவல் துறையின் மூலம்  நடவடிக்கை எடுக்கவும், சோதனைச் சாவடிகளில் எந்நேரமும் வாகனத் தணிக்கை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு அதற்கான பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற 24-ம் தேதி நடைபெற இருக்கிற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினரும் கிராமங்கள்தோறும் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு, கிராமங்களில் அரசியல் கட்சியின்  நிர்வாகிகள் மூலம் இரவு நேரங்களில் பணம் விநியோகம் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு வந்த தகவலை அடுத்து கண்காணிப்பு பணி பலப்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இப்பணிகளை மேற்கொள்வதற்காகவே ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் வாகன சோதனைச் சாவடி அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்கள் குழு மற்றும் உள்ளூர் காவல் துறையினர் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, இரவு நேரங்களில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வாகனங்கள், கார்கள், சுற்றுலா வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்கிறவர்களை முழு அளவில் சோதனையிட வேண்டும். அதேபோல், சுற்றுலா பேருந்துகளில் பொருள்கள் வைப்பறை பகுதியிலும், சீட்டுக்கள், இயந்திர பகுதி ஓரங்களிலும், அதேபோல் சொகுசு கார்களில் சீட்டுக்கள், பின்புறம் ஆகியவைகளில் சோதனையிட்ட பின்னரே அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல், அரசியல்வாதிகள் வாகனங்களிலும் பாரபட்சமில்லாமல் ஆய்வு செய்ய வேண்டும்.

இதற்காகவே மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு புகார் வந்தால், உடனே அந்த  இடத்திற்கு செல்லும் வகையில் வாகனங்கள் மற்றும் அலுவலர்கள் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இரவு நேரங்களில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக புகார் வந்தால் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று கண்காணிக்க வேண்டும். அச்செயல்களில் எந்த அரசியல் கட்சியினர் ஈடுபட்டாலும் பாரபட்சமில்லாமல் காவல் துறையினரின் கைது நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளது. அதனால், இக்குழுவினர் இரவு நேரங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் வாகனத் தணிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com