சாராயக்கடைகளை ஒழிப்பதற்காகவே பாடுபட்டு வருகிறேன்: வைகோ

விருதுநகர் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில்  போட்டியிடும் மதிமுக வேட்பாளர் வைகோவிற்காக கூட்டணி கட்சியினர் கிராமங்கள் தோறும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு
Updated on
1 min read

பெண்களின் நிம்மதியை கெடுக்கும் சாராயக்கடைகளை ஒழிப்பதற்காகவே பாடுபட்டு வருவதாக விருதுநகர் மக்களவை தொகுதி வேட்பாளர் மதிமுக வேட்பாளர் வைகோ தெரிவித்தார்.

விருதுநகர் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில்  போட்டியிடும் மதிமுக வேட்பாளர் வைகோவிற்காக கூட்டணி கட்சியினர் கிராமங்கள் தோறும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், வைகோவும்  கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் விருதுநகர் அருகே வில்லிபத்திரி, வரலொட்டி, பாலவநத்தம், எ.புதுப்பட்டி, குல்லூர்சந்தை உள்ளிட்ட கிராமங்களில் செவ்வாய்கிழமை மாலையில் பிரசாரம் மேற்கொண்டார்.இதில், விருதுநகர் அருகே பெரியவள்ளிக்குளம் கிராமத்தில் பொதுமக்களிடையே பிரசாரம் செய்து பேசியதாவது:

இக்கிராமத்தை என்னால் மறக்கவே முடியாது. கடந்த மக்களவை தேர்தலின் போது முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வீட்டில் ஒரு மாதம் காலம் தங்கியிருந்துதான் பிரசார பணிகளை மேற்கொண்டேன். அந்தத் தேர்தலில் ஜெயிக்க முடியவில்லை. ஆனால், என்னால் முடிந்தளவு பொதுமக்களுக்கான சேவைப்பணியாற்றி வந்துள்ளேன். கடந்த தேர்தலை விட தற்போது கிராமங்களில் உள்ள பெண்களின் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கிறேன்.

தமிழகத்தில் பெண்களின் நிம்மதியை கெடுக்கும் சாரயக்கடைகளை ஒழிப்பதற்காகவே பாடுபட்டு வருகிறேன். மதுக்குடியால் குடும்பமே சீரழிகிறது. இதுபோன்ற காரணங்களால் பெண்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இதை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்ட போது கிராமங்களில் லட்சக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் காத்திருந்து வரவேற்றார்கள்.

கிராமங்களில் சரியான சுகாதார வசதி இல்லாத காரணத்தால், என்னால் முடிந்தளவு வைத்திய வசதியை செய்து கொடுத்தேன். ஊனமுற்ற குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை, 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு மஞ்சள் காமலை தடுப்பு ஊசி வசதியெல்லாம் ஏற்படுத்தி கொடுத்தேன். எனக்கு சாதி மத வேறுபாடு எல்லாம் கிடையாது. அதனால், மீண்டும் பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கு வாய்ப்பு கொடுங்கள் என வைகோ கேட்டுக் கொண்டார்.

அப்போது உடன் மாவட்ட செயலாளர் ஆர்.எம்.எஸ்.சண்முகசுந்தரம், நகர செயலாளர் ராமர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வரதராஜன், பா.ஜ.க, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com