விருதுநகர் தொகுதியில் திமுக வேட்பாளரை புறக்கணிக்க வியாபார தொழில் வர்த்தக சங்கத்தினர் வேண்டுகோள்

விருதுநகர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளரை பொதுமக்கள் புறகணிக்க வேண்டும் என தென்மாவட்ட வியாபார தொழில் வர்த்தக சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Updated on
1 min read

விருதுநகர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளரை பொதுமக்கள் புறகணிக்க வேண்டும் என தென்மாவட்ட வியாபார தொழில் வர்த்தக சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து விருதுநகரில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் இணைச்செயலாளர், சுதேசி தொழில் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் பி. மகேந்திரவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விருதுநகர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுபவர் வேட்பாளர் ரத்தினவேல். இவர் சிறு வியாபாரிகளுக்கு எதிரான சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு ஆதரவாக செயல்பட்டவர். சிறு வியாபாரிகளுக்கு எவ்வித நன்மையும் செய்யாதவர். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் சிறுவணிகர்களும், சிறுவியாபாரிகளும் உறுப்பினர்கள் ஆவதை தடுத்தவர். அதோடு, நுழைவுக் கட்டணத்தை ரூ.1000-லிருந்து ரூ.5000 ஆக உயர்த்தியவர். வர்த்தக சங்கத்திலேயே சிறுவணிகர்கள் உறுப்பினர்களாக சேர்வதை விரும்பாதவர் எப்படி மக்களவையில் ஆதரவாக குரல் கொடுப்பார்.

அதோடு, சங்கத்தின் நலனுக்கு வருவாய் ஈட்டி தரக்கூடிய தொழில் வர்த்தக பொருட்காட்சி வருமானம் ரூ.36 லட்சத்தை சட்ட விரோதமாக தான் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு எடுத்துக் கொண்டவர். சமுதாய வளர்ச்சிக்கு எவ்வகையிலும் பாடுபடாமல், இடையூறு மட்டுமே செய்துள்ளார். இலங்கை தமிழர்கள் படுகொலையை கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய பின் வர்த்தக தூதுக்குழு என்ற பேரில், இலங்கை சென்று அந்நாட்டு அமைச்சரை சந்தித்ததுடன், அங்குள்ள வர்த்தக சங்கங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டவர்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தேர்தலை கடந்த 3 ஆண்டுகளாக நடத்த விடாமல் தடுத்து வருகிறார். தானே முதுநிலை தலைவர் என்ற பதவியை உருவாக்கியவர். சிறு தொழில் வணிகர்களுக்கும், பொது மக்களுக்கும் எதிராக செயல்பட்ட ரத்தினவேலுவை இத்தேர்தலில் புறகணிக்க வேண்டும். சிறு வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்படக் கூடிய வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் இணைச்செயலாளர் மற்றும் சுதேசி தொழில் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.மகேந்திரவேல் தெரிவித்தார்.

உடன் சிவகாசி காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜே.பி.பன்னீர்செல்வம், தீப்பெட்டி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் கே.பி.பாபு, விருதுநகர் வியாபார தொழில் துறை சங்கத்தின் இணைச்செயலாளர் கே.எம்.ஆர்.கார்த்திகேயன் உள்ளிட்டோர் இருந்தனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com