விருதுநகரில் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தனது ஆதரவாளர்களுடன் மோட்டார் வாகனங்களில் பேரணியாகச் சென்று இறுதிக்கட்ட பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்தனர்.
மக்களவைத் தேர்தல் இரண்டு நாள்களே உள்ளதால், இறுதியாக செவ்வாய்கிழமை மாலையோடு பிரசாரம் முடிகிறது. அதனால், அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய்கிழமை காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தனது ஆதரவாளர்களுடன் பஜார், அருப்புக்கோட்டை சாலை, அல்லம்பட்டி முக்குரோடு, ராமமூர்த்தி சாலை, பாண்டியன்நகர், முத்தால்நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.அப்போது பாண்டியன்நகரில் பொதுமக்களிடையே அவர் பேசியதாவது:
இதுவரையில் இத்தொகுதியில் மக்களவை உறுப்பினராக இருந்து பொதுமக்களுக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். அதோடு, விருதுநகர்-மானாமதுரை அகலப்பாதையில் ரயில் இயக்கம், கேந்திரிய வித்யாலயா பள்ளி, முதலிப்பட்டி பட்டாசு ஆலை விபத்து சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு மத்திய அரசு நிதி உதவி மற்றும் கிராமங்களுக்கு தேவையான குடிநீர் திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளேன்.
மேலும், வறட்சி காலங்களில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் தேசிய ஊரக உறுதி திட்டம் மூலம் ஒவ்வொருவருக்கும் 100 நாள்கள் வேலை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இத்திட்ட வேலையை 150 நாள்களாக அதிகரிக்கவும், கூலியாக ரூ.148-லிருந்து ரூ.200 உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. அதனால், மீண்டும் போட்டியிடும் எனக்கு பொதுமக்கள் அனைவரும் ஆதரவு அளிக்கும் படி மக்களவை தொகுதி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் கேட்டுக் கொண்டார்.
அப்போது, உடன் மாவட்ட தலைவர் வேலாயுதம், நகர செயலாளர் பாப்கான் கார்த்திகேயன், சட்டப்பேரவை தொகுதி தலைவர் மோகன், வைரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.