அனைத்து அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு வணிக வரிப் பணியாளர் சங்கத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகரில் தமிழ்நாடு வணிக வரிப் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் அரசு ஊழியர் சங்க கட்டட வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரா.பாலசுப்பிரமணியன் மாநில செயற்குழு கூட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் வணிக வரி பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் மற்றும் இச்சங்கத்தின் மாநில பொருளாளர் ஜெயராஜராஜேஸ்வரன் வரவு செலவு அறிக்கையை முன்வைத்தனர்.
இக்கூட்டத்தில் வணிக வரித்துறையில் அனைத்து நிலைகளிலும் 2014-ம்ஆண்டில் பதவி உயர்வு பட்டியலை வெளியிட வேண்டும். 7 ஆண்டுகள் பணி நிறைவு செய்துள்ள மக்கள் கணக்கெடுப்புத் துறையில் இருந்து வந்த பதிவு எழுத்தர்களுக்கு உடனடியாக விதிமுறைகளை தளர்த்தி பதவி உயர்வு அளிக்கவேண்டும். இத்துறையில் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும்.
துணை வணிக வரி அலுவலர் நேரடி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்து அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை காலதாமதம் இல்லாமல் உடனே நிரப்பவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் சங்க உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.