அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 95 சதவீதமாக உயர வேண்டும்: பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர்
அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 90லிருந்து 95 சதவீதமாக உயர வேண்டும் என பள்ளி கல்வி்த்துறை முதன்மை செயலர் டி.சபீதா தெரிவித்தார்.
திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களுக்கான கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பொதுத்தேர்வில் 80 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு, இந்த ஆய்வுக்கூட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் டி.சபீதா, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் டி.சபீதா பேசியதாவது:
கல்வித்துறையின் வளர்ச்சிக்கு ரூ.65ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து, புதுமையான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 358 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்றன. 2013ல் 453 பள்ளிகளாகவும், 2014ல் 887ஆகவும் 100 சதவீத தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன.
அதேபோல் பிளஸ்2 தேர்வில் 2013 ஆம் ஆண்டு 42ஆக இருந்த 100 சதவீத தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை, 2014ல் 113 பள்ளிகளாக அதிகரித்துள்ளன. மேலும், மாநில அளவிலான முதல் 3 இடங்களில், அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சிப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தரமான கல்வி அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில், தமிழக அரசு 71,708 ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டது. அதில் 53,788 இடங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு விளையாட்டு ஆர்வமும் தேவை என்பதை கருத்தில் கொண்டு, 2011-12 கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் சதுரங்க விளையாட்டு தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற சதுரங்க போட்டியில், மாநிலம் முழுவதிலுமி்ருந்து 11.50 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் சிறந்த 24 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல் நிகழாண்டில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்க 15 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் மாநிலத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 90 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள 5 மாவட்டங்கள், தர வரிசையில் பின்னடைவு பெற்றுள்ளன. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், கடந்த ஆண்டு 8ஆம் இடத்திலிருந்த மதுரை மாவட்டம் 16ஆவது இடத்திற்கும், 21ஆவது இடத்திலிருந்த திண்டுக்கல் 22ஆவது இடத்திற்கும், 17ஆவது இடத்திலிருந்த தேனி மாவட்டம் 25ஆவது இடத்திற்கும் பின்னோக்கி சென்றுள்ளன.
அதேபோல் பிளஸ்2 தேர்வில் முதலிடத்திலிருந்த விருதுநகர் 3ஆம் இடமும், 12லிருந்த சிவகங்கை 13ஆவது இடமும், 8ஆம் இடத்திலிருந்த மதுரை 16ஆவது இடமும், 17ஆவது இடத்திலிருந்த திண்டுக்கல் 19ஆம் இடமும், 9ஆம் இடத்திலிருந்த தேனி 15ஆவது இடத்திற்கும் தரம் குறைந்துள்ளன.
பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், முதல் வகுப்பு முதல் பிளஸ்2 வரை அனைத்து வகுப்புகளிலும் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும். பொதுத் தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம், 95 சதவீதமாக உயர்வதற்கு தலைமையாசிரியர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.
பிற்பகலில் நடைபெற்ற கூட்டத்தில், ஈரோடு மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் சிறந்த தேர்ச்சி விகிதத்தை உருவாக்கி ஆசிரியர்கள், 234 தலைமையாசிரியர்களுக்கும் பயிற்சி அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
