சீன பட்டாசுகள் கடத்தி வருவதை தடுக்க பிரதமரிடம் முறையிட்டு முதல்வர் தீர்வு காண வேண்டும்: சிறு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

சீன பட்டாசுகள் கள்ளத்தனமாக கடத்தி வருவதை தடுக்க பாரத பிரதமரிடம் தமிழக முதல்வர் முறையிட்டு தீர்வு காண வேண்டும் என விருதுநகர் மாவட்ட சிறு பட்டாசு உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
Updated on
1 min read

சீன பட்டாசுகள் கள்ளத்தனமாக கடத்தி வருவதை தடுக்க பாரத பிரதமரிடம் தமிழக முதல்வர் முறையிட்டு தீர்வு காண வேண்டும் என விருதுநகர் மாவட்ட சிறு பட்டாசு உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட சிறு பட்டாசு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.விநாயகமூர்த்தி தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரி்க்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர் மாவட்டத்தில் 840-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இத்தொழிலில் 3 லட்சம் பேர் நேரிடையாகவும், 2 லட்சம் பேர் மறைமுகமாகவும் என மொத்தம் 5 லட்சம் பேரும், பட்டாசு ஆலை உரிமையாளர்களும் உள்ளனர்.

தற்போது, தீபாவளி பண்டிகைக்கு குறைந்த நாள்களே உள்ளதால், பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனைக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வடமாநிலங்களில் இருந்து சீன பட்டாசுகளை கள்ளத்தனமாக கடத்தி வரப்பட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால், வடமாநில வியாபாரிகள் இம்மாவட்டத்தில் தயாராகும் பட்டாசுகளை வாங்க வருவதில்லை. இதனால் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலைமையேற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் பட்டாசு தொழிலை விட்டால் வேறு எந்த மாற்றுத் தொழிலும் தெரியாது. இந்த ஆலைகளை நம்பியே அச்சகம், கட்டிங், அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழில் மற்றும் ஒட்டுதல், வியாபாரிகள் உள்ளிட்டோர் உள்ளனர். இது தொடர்பாக  தமிழக முதல்வர், பாரத பிரதமரிடம் முறையிட்டு சீன பட்டாசுகளை இந்தியாவிற்குள் கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது, 500-க்கும் மேற்பட்ட கன்டெய்னர்களில் சீனா பட்டாசுகள் வந்து இறங்கியுள்ளது. இதனால் இம்மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் தயாரிக்கப்பட்டுள்ள பல ஆயிரம் கோடி மதிப்பிலான பட்டாசுகள் தேக்கமடையும் நிலையும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழ்நிலையிருக்கிறது. எனவே பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதியும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் சிறு பட்டாசு ஆலைகளின் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com